எஸ்.ஓ.பி.யில் காவல்துறையினருக்கு இன்னும் குழப்பம், ‘தவறுதலாக தண்டம்’ விதிக்கின்றனர்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின், செந்தர இயங்குதல் நடைமுறைகளில் (எஸ்ஓபி) அதன் உறுப்பினர்கள் பலர் இன்னும் குழப்பத்தில் இருப்பதால், சில நேரங்களில் ‘தவறுதலாக’ சிலர் தண்டம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைக்  காவல்துறையினர் ஒப்புக்கொள்கிறார்கள்.

புக்கிட் அமான், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு (கே.டி.என்.கே.ஏ) இயக்குநர் அப்துல் இரஹீம் ஜாஃபார், தனது தரப்பு இந்த விஷயத்தை அவ்வப்போது மேம்படுத்துகிறது எனக் கூறியதாக, மிங்குவான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

“சில நேரங்களில் அனைவரின் புரிதலும் வித்தியாசமாக இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை, எனவே இந்த விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கும். இந்தப் பி.கே.பி. காலத்தில் எஸ்ஓபி சட்டம் குறித்து எங்கள் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைப் புரிந்துகொள்ளச் செய்யும் பணியில் நாங்கள் இன்னும் இருக்கிறோம்.

“சாதாரண தகவல்தொடர்பு அடிப்படையில் பார்த்தால், நாங்கள் முதல் நபருக்குத் தகவல்களைத் தெரிவிக்கும்போது, ​​10-வது நபருக்கு வெவ்வேறு தகவல்கள் கிடைக்கும். எனவே, நாடு முழுவதும் 100,000 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தகவல் விநியோகிக்கப்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள், நிச்சயமாக பிரச்சினைகள் இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அடிக்கடி மாறிவரும் எஸ்ஓபி-க்களின் பிரச்சினையையும் அப்துல் இரஹீம் எழுப்பினார், இது விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

முன்னதாக, பொது பூங்காவில் தனியாக இருக்கும்போது அல்லது பொது போக்குவரத்துப் பகுதிகளில் முகக்கவரிகளை விலக்குவது போன்ற பல சிக்கல்கள் காரணமாக குடியிருப்பாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகப் பல தகவல்கள் வந்தன.

மேலும் கருத்துத் தெரிவித்த அப்துல் இரஹீம், அதிகாரிகள் இப்போது எஸ்ஓபிக்களை மீறுபவர்களுக்குத் தகுந்த தண்டங்களை வழங்க அனுமதிக்கும் நிலைமைகளைப் பெரும்பாலும் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.

“முன்பு இது நிறைய நடந்தது, ஆனால் இப்போது அது குறைந்துவிட்டதை நீங்கள் காணலாம்,” என்றார் அவர்.