விமர்சனம் | தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே 2.0) மலேசியாவில் தேர்தல் நிர்வாகக் குழுவை வெவ்வேறு தன்னிருப்புரிமை மற்றும் அதிகார வரம்புடன் மூன்று ஆணையங்களாகப் பிரிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. மலேசியாவில் தேர்தல் மேலாண்மையை மிகவும் திறமையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுத்த இது அவசியம் என்று அது நம்புகிறது.
தற்போது, தேர்தல் ஆணையம் (எஸ்.பி.ஆர்.) தேர்தல் அமலாக்கத்தின் அனைத்து பணிச்சுமைகளையும் கொண்டுள்ளது, அதாவது வாக்காளர் பதிவு, தொகுதிகளை மறுவரையறை செய்தல், தேர்தல் பயணங்களான வேட்பாளர் நியமனம் மற்றும் தேர்தல் குற்றச் சட்டத்தை அமல்படுத்துதல் போன்றவைக் காவல்துறை போன்ற பிற நிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்துகிறது.
பெர்சே 2.0 இன்று, “மூன்று சிறந்தது : மலேசியாவில் தேர்தல் நிருவாகத்திற்கான நிறுவன சீர்திருத்தம்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இந்த முன்மொழிவுகளைச் செய்துள்ளது.
இந்த ஆய்வை, எங்கள் அதிகாரி சான் சூ சோங் நடத்தினார். முன்மொழியப்பட்ட மூன்று ஆணையங்கள் :
1.தேர்தல் ஆணையம் – வாக்காளர் பதிவு, வேட்பாளர்களை நியமித்தல், வாக்குப்பதிவு தினத்தை அமல்படுத்துதல், வாக்குகளை எண்ணுதல் மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் போன்ற தேர்தல் அமலாக்க செயல்முறைக்கு இந்த ஆணையம் பொறுப்பாகும்.
2. தேர்தல் அமலாக்க ஆணையம் (எஸ்.பி.பி.ஆர்) – தேர்தல் சட்டம் 1958 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து சட்டங்களையும் கண்காணித்து உறுதி செய்வதே இந்த ஆணையத்தின் பொறுப்பாகும்.
கூடுதலாக, அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் அரசியல் கட்சிகளின் ஆண்டு அறிக்கைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பதிவு மற்றும் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் இது பொறுப்பாகும். விசாரணை நடத்தவும், பிடி ஆணை பிறப்பிக்கவும், சந்தேக நபர்களையும் சாட்சிகளையும் வரவழைக்கவும் எஸ்.பி.பி.ஆர்.-க்கு அதிகாரம் இருக்கும். எஸ்.பி.பி.ஆர். புகார்களைப் பெறுவதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் தேர்தல் தீர்ப்பாயங்களை அமைக்கலாம்.
இந்த ஆணையம் காவல்துறை தலைவர் (ஐ.ஜி.பி), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர், சட்டத்துறைத் தலைவர் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இந்த நான்கு பேரில், இருவர் சமூக அமைப்புகளிலிருந்து நியமிக்கப்பட வேண்டும்.
3. எல்லை வரம்பு ஆணையம் (எஸ்.பி) – கூட்டாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாவது அட்டவணையின் விதிகளின் அடிப்படையில், மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும் போது இந்த ஆணையம் தற்காலிக அடிப்படையில் நிறுவப்படும். எல்லை நிர்ணயத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க எஸ்.பி.க்கு இறுதி அதிகாரம் அளிக்க பதின்மூன்றாவது அட்டவணை திருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.
எஸ்.பி.-யில், ஒரு ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி, ஒரு தேர்தல் ஆணைய உறுப்பினர், ஒரு எஸ்.பி.பி.ஆர். உறுப்பினர், நிலங்கள் மற்றும் கணக்கெடுப்புத் துறையின் இயக்குநர், தேசியப் புள்ளிவிவரத் துறையின் இயக்குநர் மற்றும் செல்லுபடியாகும் தகுதிகளுடன், தேர்தல்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் புவியியலில் குறைந்தது 10 வருட அனுபவம் கொண்ட இருவரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த மூன்று ஆணையங்களும் நிருவாக மற்றும் சிவில் சேவையிலிருந்து முற்றிலும் தன்னிருப்புரிமையுடன் இருக்க வேண்டும் என்று பெர்சே 2.0 பரிந்துரைக்கிறது. இந்த ஆணையக்குழுக்கள், அனைத்தையும் கண்காணித்து தேர்தல் தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற சிறப்பு தேர்வு செயற்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருக்க தகுதியுள்ள வேட்பாளர்களை நியமனம் செய்வதற்காக, பேரரசருக்கு வழங்கப்பட வேண்டிய தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் திரையிடவும், பட்டியலிடவும் தேர்தல் ஆணையத்தின் நியமனத்திற்கான சிறப்பு குழு (ஜே.கே.பி.ஆர்.) அமைக்கப்பட வேண்டும் என்று பெர்சே 2.0 முன்மொழிகிறது.
இந்தக் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் விஷயங்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் தலைவர் மற்றும் ஓர் உறுப்பினர், தலைமை நீதிபதி, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சுஹாகாம்), வழக்குரைஞர் மன்றத் தலைவர் மற்றும் சமூக அமைப்பைச் சார்ந்த ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும் பெர்சே 2.0 பரிந்துரைத்துள்ளது.