அவதூறு, தேசத்துரோகம் மற்றும் ஓஎஸ்ஏ ஆய்வுகள் – தாமஸ் முழுமையாக  ஒத்துழைப்பார்

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பு தொடர்பில் பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், மூன்று விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

அவரது வழக்கறிஞர் சங்கீத் கோர், தனது கட்சிக்காரர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க உறுதியளித்துள்ளார் என்றார்.

“புகார்களுக்கு விளக்கமளிக்க எங்கள் கட்சிக்காரர் முழு ஒத்துழைப்பை வழங்குவார், என நாங்கள் காவல்துறைத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

எவ்வாறாயினும், தாமஸின் வாக்குமூலம் எப்போது பதிவு செய்யப்படும் என்பது குறித்து போலீசாரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.

ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “இன்னும் இல்லை,” என்று அவர் பதிலளித்தார்.

நேற்று, மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் ஹுசிர் முகமது கூறுகையில், இந்தப் புத்தகம் தொடர்பாக நாடு முழுவதும் 134 புகார்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன என்றார்.

தாமஸ் உட்பட எந்தவொரு தரப்பினரையும், வாக்குமூலங்கள் பதிவு செய்ய அழைக்கப்படுவதற்கு முன்னதாக, புக்கிட் அமானின் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

“திறக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளில் ஒன்று அவதூறுக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-ன் கீழ் உள்ளது, மேலும் 1972-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் (தகவல் கசிவு) மற்றும் பிரிவு 8-இன் கீழ் மற்றொரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

“தேசத் துரோகச் சட்டம் 1948-ன் பிரிவு 4 (1)-இன் படி, மூன்றாவது விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது (தூண்டுதலுக்கானச் செயல்கள்),” என்று அவர் மேலும் கூறினார்.

தாமஸுக்கு எதிராகப் போலிஸ் புகார்களைப் பதிவு செய்தவர்களில், அவரது முன்னோடி முகமது அபாண்டி அலி மற்றும் முன்னாள் சட்டத்துறை ஆலோசகர் III மொஹமட் ஹனாபியா ஜகாரியா ஆகியோரும் அடங்குவர்.

தாமஸ் எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றக் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறைத் துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, விசாரணை அதிகாரிகளுக்கு அவர்களின் வழக்குகளைக் கையாள நேரம் கொடுக்க வேண்டும் என்று மலேசியாகினியிடம் கூறினார்.