புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம், இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் (பி.டி.பி.ஆர்.) மாணவர்கள் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களின் விலைகள் அதிகரிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி 150,000 மடிக்கணினிகளை மாணவர்களுக்கு ஒதுக்குவதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்றும் சிம் கோரினார்.
சினார் ஹரியான் செய்தித் தளம் மடிக்கணினிகள் மற்றும் மின்னணு கேஜெட்களின் விலை 70 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து டிஏபி சட்டமன்ற உறுப்பினரான அவர் இவ்வாறு கூறினார்.
அதே விஷயத்தில், பெற்றோரிடமிருந்து பல புகார்களும் தனக்கு வந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
“இந்தச் செய்தி ஆச்சரியமல்ல, ஏனென்றால் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, குறைந்த விலையில் மடிக்கணினிகளின் இருப்பு இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, இதனால் அதிக விலையுள்ள மடிக்கணினிகளை வாங்க நுகர்வோர் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
“உண்மையில், தங்கள் குழந்தைகளுக்கான சாதனங்களை வாங்க வேண்டிய பொதுமக்களிடமிருந்து எனக்கு பல்வேறு புகார்கள் வந்தன,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும், கோவிட் -19 தொற்று காலத்தில் மாணவர்கள் வழக்கம் போல் கல்வியைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சிம் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கம் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் தோல்வியுற்றதாகக் காணப்படுவதால், மக்கள் சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி, நம்பிக்கை நெருக்கடி மற்றும் கல்வி நெருக்கடி போன்ற பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
“ஏப்ரல் 2020-இல் வெளியிடப்பட்ட கல்வி அமைச்சின் அறிக்கை, மலேசியாவில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு மாணவர்களுக்குப் பி.டி.பி.ஆரைப் பின்பற்ற எந்தச் சாதனமும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 5.7 விழுக்காட்டினருக்கு மட்டுமே கணினி அல்லது வரைப்பட்டிகை (tablet) உள்ளது, 46 விழுக்காட்டினர் திறன்பேசிகளை வைத்திருக்கிறார்கள்.
“சிறியத் திரை திறன்பேசிகளின் பயன்பாடு, நிச்சயமாக பி.டி.பி.ஆரில் பல்வேறு சவால்களையும் சிரமங்களையும் தருகிறது,” என்று அவர் கூறினார்.