பி.டி.பி.ஆர். 2.0 : ராட்ஸி தலையிட வேண்டும், என்.யு.டி.பி. விருப்பம்

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) 2.0-ஐ நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் ஒன்றியம் (என்.யு.டி.பி.) மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியது.

ஒரு மாணவருக்கான, அதிகபட்சத் திரை கால ஒதுக்கீட்டை மீறும் அதன் அட்டவணை நேர ஒதுக்கீட்டின் அடிப்படையில் என்.யு.டி.பி. இந்தப் பரிந்துரையைச் செய்வதாகக் கூறியது.

என்.யு.டி.பி. பொதுச்செயலாளர் ஹேரி தான் கருத்துப்படி, பி.டி.பி.ஆர். 2.0 கால அட்டவணை செயல்படுத்தல் வழிகாட்டியில், ஒதுக்கப்பட்ட நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை – இது ஒரு நாளைக்கு ஐந்தரை மணி நேரம்.

அமெரிக்க குழந்தைகள் மருத்துவக் கல்வி கழகம் (அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’- ஏ.ஏ.பி.) மற்றும் உலகச் சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) ஆகியவற்றின் தினசரி அதிகபட்சத் திரை கால வழிகாட்டி பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகிறது :

  • பாலர் பள்ளி : 1 மணி நேரம்
  • ஆரம்ப பள்ளி : 1 முதல் 2 மணி நேரம்
  • கீழ்நிலை இடைநிலைப் பள்ளி : 2 முதல் 3 மணி நேரம்
  • மேல்நிலை இடைநிலைப்பள்ளி : 3 முதல் 4 மணி நேரம்

“மலேசியக் கல்வி அமைச்சு அதிகபட்சத் திரை கால வழிகாட்டலுடன் இணங்கவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று தான் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பதிவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு கல்வியமைச்சால் வழங்கப்பட்ட பி.டி.பி.ஆர். கையேட்டில் அதிகபட்சத் திரை கால வழிகாட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

என்.யு.டி.பி. நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பி.டி.பி.ஆர். 2.0-ஐ நிராகரிப்பதுடன், பி.டி.பி.ஆர். 1.0-ஐ மேம்படுத்த விரும்புவது கண்டறியப்பட்டதாக தான் கூறினார்.

13,946 பதிலளித்தவர்களில் 91.2 விழுக்காட்டினர் – அதாவது 12,718 பேர் – பிடிபிஆர் 1.0 பராமரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

என்.யு.டி.பி.யை அழைக்காதது மிகவும் ஏமாற்றம்

தானின் கூற்றுப்படி, ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களில், கணினி அல்லது மின்னணு உபகரணங்களின் முன் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாணவர்கள் வகுப்பை எதிர்கொள்ளப் பழக முடியவில்லை.

எனவே, இணைய அணுகலை அதிகரிப்பதன் மூலமும், ஒரு நாளில் பாடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமும், ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓய்வெடுக்க ஏதுவாக சுழற்சிகளை உருவாக்குவதன் மூலமும் பி.டி.பி.ஆர். 1.0 மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பல மாணவர்கள் இன்னும் பி.டி.பி.ஆர்-க்குச் சொந்த சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பல குழந்தைகள் இன்னும் இந்தச் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

பி.டி.பி.ஆர். 2.0 குறித்த ஒரு தனி கணக்கெடுப்பில், 16,554 பெற்றோர்களின் கருத்துக்களையும் என்.யு.டி.பி. சேகரித்தது.

பி40 குழுவைச் சேர்ந்த சில பெற்றோர்கள், பி.டி.பிஆருக்குக் கூடுதல் சாதனங்களைப் பெற வேண்டியிருப்பதால் தாங்கள் மனச்சோர்வடைந்துள்ளதை ஒப்புக் கொண்டனர். மேலும், சில மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான உடன்பிறப்புகள் காரணமாகச் சாதனத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது, குறிப்பாக கற்றல் நேரம் ஒரே சமயத்தில் இருந்தால்.

தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றலில் உதவுவது சுமையாகவும் கடினமாகவும் இருப்பதாகப் புகார் கூறும் பெற்றோர்களும் உள்ளனர், குறிப்பாக உயர்க்கல்வி கற்காதவர்கள், அதேநேரத்தில் மாணவர்கள் பள்ளி வேலைகளைச் செய்து முடிப்பதிலும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதைப் பற்றியப் புரிதல் குறைவு என்றும், ஆசிரியர்களால் மாணவர்களின் திறன் அளவை ஆராய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

“இது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முறையீடுகளைக் கேட்டு, அவர்களின் குறைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் பி.டி.பி.ஆர். 2.0-ஐ ஒத்திவைக்க மூத்தக் கல்வி அமைச்சரின் தலையீட்டை என்.யு.டி.பி. கேட்கிறது.

“இதுபோன்றதொரு முடிவெடுக்கும் தருணத்தில், மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான, மலேசியா முழுவதும் அடிமட்டத்திலிருந்து 230,000 ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கல்வியாளர்களின் உரிமைகள், பிரச்சினைகள் மற்றும் நலனுக்காக போராடும் என்.யு.டி.பி.-ஐ கல்வியமைச்சு கலந்தாலோசிக்கவில்லை, எங்களை அழைக்கவில்லை என்பதில் என்.யு.டி.பி. மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.

“இந்தப் புதிய விதிமுறை பருவத்தில் அனைத்து மாணவர்களும் பி.டி.பி.ஆரை சிறந்த முறையில் தொடர வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.