இன்று 2,764 புதிய நேர்வுகள், ஜனவரி 11-க்குப் பிறகு மிகக் குறைவு

கோவிட் 19 | நாட்டில் இன்று, 2,764 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரி 11-க்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த பதிவாகும்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 2.0, ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, புதிய நேர்வுகள் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர், சரவாக், பினாங்கு மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதேசமயம், சபா, நெகிரி செம்பிலான், கெடா, கிளாந்தான், பேராக், திரெங்கானு, பஹாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலும் லாபுவான் மற்றும் புத்ராஜெயாவிலும் குறைந்து வருகிறது.

12 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 11 பணியிடம் தொடர்பான திரளைகளாகும்.

இன்று, 3,887 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 289 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 127 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மேலும், இன்று 13 நோயாளிகள் மரணமடைந்துள்ளனர். ஆக, நாட்டில் இதுவரை இத்தொற்றுக்குப் பலியாகியோரின் எண்ணிக்கை 909 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பெர்லிஸில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் 862, ஜொகூர் 521, கோலாலம்பூர் 422, மலாக்கா 203, சபா 180, பினாங்கு 119, சரவாக் 111, நெகிரி செம்பிலான் 99, கிளாந்தான் 62, கெடா 59, பேராக் 40, திரெங்கானு 34, பஹாங் 32, லாபுவான் 10, புத்ராஜெயா 10.