வெளியிடப்பட்ட அந்த நினைவு குறிப்பு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுடன், மாறுபட்ட பார்வையைக் கொண்டிருப்பது, அப்புத்தகத்தைத் தடை செய்வதற்கான ஒரு காரணம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ரபிதா அஜீஸ் கூறினார்.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) டாமி தாமஸின் நினைவுக் குறிப்பு புத்தகத்தைத் தடை செய்யக் கோரியவர்களை விமர்சித்த ரஃபீடா, வேறுபட்ட கருத்துக்களுடன் உடன்படாததால், சகிப்புத்தன்மை இழந்துவரும் மலேசியாவின் சூழல் கவலைக்குரியது என்றார்.
“ஒருவர் தனது தனிப்பட்ட நினைவுக் குறிப்பை எழுதுகையில், வாசகர், ஆய்வாளர் அல்லது வர்ணனையாளரின் கண்ணோட்டத்தில், விஷயங்களைப் பார்த்து எழுத கட்டாயப்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம்,.
“எழுதியவரின் செய்தியை ஒருவர் விரும்பாதக் காரணத்தினால், அவரைத் தண்டிக்கக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் கருத்து, அது உங்கள் கருத்திலிருந்து வேறுபட்டிருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
வெளிப்படையாக பேசும் தலைவர் என அறியப்பட்ட ரஃபீடா, சில விஷயங்களில் தாமஸுடன் உடன்படாமல் இருக்கலாம் என்று கூறினார்.
“ஆனால், அது புத்தகத்தைத் தடைசெய்ய யாருக்கும் உரிமை அளிக்காது.
“இது ஒரு கவலையான போக்கு, கருத்து வேறுபாடுகள் மற்றும் கருத்துக்களின் பன்முகத்தன்மைக்கு இடமில்லை,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
“ஆனால், அதே நேரத்தில், சில தவறுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, சிலர் உண்மைகளைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இது சமூக ஊடகங்களில் பரவலாகியப் போதிலும்,” என்று ரஃபீடா கூறினார்.
“டாமியின் சுயசரிதை / நினைவுக் குறிப்பு பற்றி கேள்விகள் கேட்பவர்கள் யாரும், டாமி தனக்கு தெரிந்ததைப் பற்றி எழுதியவற்றுடன், அவரின் அவதானிப்புகளுடன் பலர் உடன்படுகிறார்கள் என்பதை உணரவில்லையா?
“அல்லது எதையாவது அலங்கரிக்கும், கசப்பான விஷயங்களை இனிமையாக்குகிற, வெளிப்படையானதை மறுக்கும், பாதுகாப்பான பாதையை எடுக்கும் ஒரு நினைவுக் குறிப்பை மட்டும்தான் நாம் விரும்புகிறோமா?” என்று கேல்வி எழுப்பினார்.
“வரலாற்று நிகழ்வுகள் மறுக்க முடியாதவை. ஒவ்வொரு நிகழ்விற்கும், குறிப்பாக ஓர் அரசியல் கண்ணோட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நம்முடைய சொந்த விளக்கம் இருக்கும்.
“ஆனால் அது ஒரு தவறு அல்ல,” என்று அவர் கூறினார்.
தனது சொந்த நினைவுக் குறிப்பைத் தயாரித்து கொண்டிருக்கும் ரஃபீடா, ஒரு நிகழ்வைப் பற்றி அல்லது தனிநபரைக் குறிப்பிட ஒரு நல்ல பார்வை வேண்டும் என்று மட்டுமே வாசகர்கள் எதிர்பார்ப்பது கிடையாது என்றார்.
“நான் என் நினைவுக் குறிப்பை எழுதும் போது என்னை வழிநடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை. என்ன நடந்தது, என்ன சொல்லப்பட்டது என்று எனக்குத் தெரியும், பெயரைச் சொல்வதா இல்லையா என்பது என்னைப் பொறுத்தது.
“அது என்னுடையது. ஒருவரின் நினைவுக் குறிப்பை, அரசியல் நோக்குடன் திருத்த, பேனாவைக் காகிதத்தில் வைப்பது சரியல்ல,” என்று அவர் கூறினார்.