இன்று முதல் உணவகத்தில் சாப்பிட அனுமதி

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ், உணவகங்களில் சாப்பிடுவது இன்று முதல் அனுமதிக்கப்படுகிறடு, ஆனால் ஒரு மேஜைக்கு இரண்டு பேருக்கு மட்டுமே இது வரையறுக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) சிறப்புக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார் அவர்.

எவ்வாறாயினும், உணவகங்களும் அதன் உரிமையாளர்களும் கண்டிப்பாக செந்தர இயங்குதல் நடைமுறைகளைப் (எஸ்.ஓ.பி.) பின்பற்ற வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

ஆடை, அலங்காரம், ஆபரணங்கள் மற்றும் காலணிகளை உள்ளடக்கிய சில்லறை துறை கடைகளும் இன்று முதல் திறக்கப்படலாம் என்றும் அவர் அறிவித்தார்.

செயல்பட அனுமதிக்கப்பட்ட பிற சில்லறை துறைகள் : புகைப்படக் கடைகள் மற்றும் புகைப்படச் சேவை கடைகள், இரண்டாந்தர பொருள் விற்பனை கடைகள், பூக்கடைகள் மற்றும் நாற்றங்கால் கடைகள், நினைவுப் பரிசு கடைகள், சிறுவர் விளையாட்டுப் பொருள் கடைகள், பழம்பொருள் விற்பனை கடைகள், விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைகள், தரைவிரிப்பு கடைகள், அழகுசாதனப் பொருள் விற்பனை கடைகள், சமையலறை பாத்திரக் கடைகள் மற்றும் வாகன உபரிபாகங்கள் விற்பனை கடைகள் ஆகியன.

“வணிகங்கள் மூடப்பட்டபோது, பல்வேறு துறைகளில் பலர் வருமானத்தை இழந்துள்ளதை அரசாங்கம் கருத்தில் கொண்டுள்ளது,” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

அதே அடிப்படையில், சமீபத்தில் இரவுச் சந்தைகள், முடிதிருத்தும் கடைகள் மற்றும் கார் கழுவும் மையங்களைத் திறக்க அரசாங்கம் அனுமதித்தது என்றார் அவர்.

வணிகத் துறையுடன் தொடர்புடையக் கோவிட் -19 திரளைகள் எதுவும் இதுவரை அடையாளம் காணபப்டவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், எந்தவொரு வணிக வளாகத்திலும் கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டால், அந்த வளாகத்தை உடனடியாக மூட உத்தரவிடப்படும் என்றும் இஸ்மாயில் சப்ரி நினைவுபடுத்தினார்.

“தளர்வு வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் எஸ்.ஓ.பி.-ஐ புறக்கணிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

ஆடை மற்றும் அலங்காரக் கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் வளாகத்திற்குள் நுழையும்போது, அவர்களுக்குக் கையுறைகளை வழங்குமாறு இஸ்மாயில் சப்ரி நினைவுபடுத்தினார்.

புகைப்படச் சேவை கடையில், கடப்பிதழ், அயல்நாட்டு நுழைவுச் சான்று மற்றும் வாகன உரிமத்திற்கான புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அழகுசாதன கடைகளில், புதிய எஸ்ஓபி-யில், வாடிக்கையாளர்கள் தோல் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களின் மாதிரிகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றார்.