‘3 நாள் தனிமைப்படுத்தல் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் நீட்டிக்கப்படலாம்’

தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை, 10 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு தளர்த்துவது பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார்.

மலேசியாகினியுடன் பேசிய ஆடாம், தற்போது அமைச்சர்களுக்கு மட்டுமே உள்ள இந்த முறை எதிர்காலத்தில் வணிகர்கள் அல்லது பொது மக்களுக்கும் கூட நீட்டிக்கப்படலாம் என்றார்.

“நாங்கள் அதை முதலில் அமைச்சர்களிடம் செய்கிறோம், ஏனென்றால் அமைச்சர்களிடம் அதனைச் செயல்படுத்துவது எளிது, மற்றவர்களுக்குத் திறந்துவிடுவதற்கு முன்பாக, உதாரணத்திற்கு வணிகர்கள்,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

தற்போது, ​​தளர்வு என்பது உத்தியோகபூர்வப் பணியில் வெளிநாட்டில் இருக்கும்போது, “கடுமையான அட்டவணை திட்டங்களை” பின்பற்றும் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே.

10 நாள் தனிமைப்படுத்தப்படும் காலம் முதலீட்டாளர்களுக்கும், மலேசியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கும் ஒரு தடையாக உள்ளது என்று ஆடாம் விளக்கினார்.

“நமது பொருளாதாரத்தைத் திறந்துவிடவே அரசாங்கம் இதைச் செய்கிறது.

“வழக்கமாக புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு சோதனையையும், நம் நாட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலையும் நாம் கேட்கிறோம். எனவே, அது 3 + 7 நாட்கள் ஆகும்.

“அவர்கள் புறப்படுவதற்கு முன்பு சோதனையைச் செய்யாவிட்டால், அவர்கள் இங்கு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், மேலும் சர்வதேச நுழைவாயில்கள் மற்றும் தனிமைப்படுத்தல்களில் 10 நாட்களுக்கு எதிர்மறை முடிவுகள் காணப்பட வேண்டும்.

“அதனால்தான் முதலீட்டாளர்களும் வெளிநாட்டுத் தலைவர்களும் வருவதில்லை … அதனால்தான் முதலீடுகள் வரவில்லை,” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கடந்த ஆண்டு, பி.கே.பி. 1.0-இன் போது, ​​நாடு ஒரு நாளைக்கு RM2.4 பில்லியனை இழந்தது என்று அவர் கூறினார்.

பி.கே.பி. 2.0-இன் கீழ், இழப்பு ஒரு நாளைக்கு RM600 மில்லியன் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆடாம் இந்தோனேசியாவுடன் ஓர் ஒப்பீடு செய்தார், கடந்த வாரம் அந்நாட்டிற்குப் பயணம் செய்த பிரதமர் முஹைதீன் யாசின் மீது தனிமைப்படுத்தல் விதிக்கப்படவில்லை.

“இந்தோனேசியா, அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைப் பதிவு செய்திருந்த போதிலும், முஹைதீனை ஏன் தனிமைப்படுத்தவில்லை? ஏனென்றால் அவர்கள் பொருளாதாரத்தைத் திறந்துவிட விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 கிருமிகள், அமைச்சர்கள் அல்லது சாதாரண மக்கள் என பாகுபாடு காட்டவில்லை என்று விமர்சகர்கள் முன்னர் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படுவதை விமர்சித்தனர்.

10 நாள்கள் தனிமைப்படுத்துதல் காலம் மருத்துவத் தரவை அடிப்படையாகக் கொண்டது, இது ஆடாமின் கூற்றுப்படி உண்மையானது.

இருப்பினும், இது அறிவியலைப் பற்றியது மட்டுமல்ல என்று அவர் கூறினார்.

“இது அறிவியலைப் பற்றியது மட்டுமல்ல. வெளிநாடு செல்பவர்களை நாம் எவ்வாறு ஒழுங்கமைக்கிறோம் என்பது பற்றியது.

“வெளிநாட்டில் அவர்களுக்குத் தனிமைப்படுத்தல் தேவையில்லை, ஆனால் அவர்கள் திரும்பி வரும்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது நியாயமில்லை,” என்று அவர் கூறினார்.

இராஜினாமா செய்வதற்கான அழைப்பையும் அவர் நிராகரித்தார்.

“பரவாயில்லை. அது முக்கியமல்ல. நான் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

“முன்பு நான் நாட்டைப் பூட்டி வைத்தேன், இப்போது என்னால் நாட்டைத் திறந்துவிட முடியும். நான் நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.