லிம் குவான் எங்-கும் துணை முதலமைச்சர்களும் இன்று ஸ்கோர்ப்பியோன் நீர் மூழ்கியில் பயணம் செய்வர்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது துணை முதலமைச்சர்களான மான்சோர் ஒஸ்மான், பி ராமசாமி ஆகிய மூவர் மட்டுமே  இன்று ஸ்கோர்ப்பியோன் நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

கேடி துன் ரசாக் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி, முக்குளிக்க முடியும் என்பதை நேரடியாகக் காண்பதற்கு அவர்களை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹாமிடி அழைத்துள்ளார்.

லிம்-மின் தனிப்பட்ட உதவியாளர் வோங் கிம் பெய்-யும் மெய்க்காவலர் அஸ்மி கெச்சிக்-கும் அந்த மூவருடன் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இன்று பிற்பகல் மணி 1.30க்கு அந்த மூவரும் லங்காவி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைவர். அங்கிருந்து அவர்களை ஹெலிகாப்டர் ஒன்று குறிப்பிட்ட இடத்துக்குக் கொண்டு செல்லும்.

மாலை மணி 4.00 வாக்கில் லிம் குழுவினார் போர்ட்டோ மாலாயில் உள்ள ஹோட்டல் அவானாவுக்குத் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் கடல் சாகசக் காட்சிகளைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நங்கூரமிட்டுள்ள போர்க்கப்பல்கள் கண்காட்சியையும் சுற்றிப் பார்ப்பார்கள்.

இதனிடையே அந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை சேகரிக்க சென்றுள்ள நிருபர்கள் கோலா பெர்லிஸ் கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ள கப்பல் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவர். அந்தக் கப்பலை படகு மூலம் சென்றடைய ஐந்து மணி நேரம் பிடிக்கும்.

நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நிருபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நிகழ்வின் போது கப்பலில் இருக்கும் ஸாஹிட்டை அல்லது பினாங்கு குழுவினரை நிருபர்கள் சந்திக்க முடியுமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.

அந்த நீர்மூழ்கி முக்குளிக்கும் போது பயணம் செய்ய வருமாறு அமைச்சர், எதிர்க்கட்சியைச் சேந்ர்தவர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் செனட்டர்களையும் அழைத்துள்ளதாக கடந்த புதன்கிழமை பெர்னாம தகவல் வெளியிட்டிருந்தது.

ஸ்கோர்ப்பியோன் நீர்மூழ்கி முக்குளிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை எனக் கூறப்படுவதை பொய் என நிரூபிப்பதற்காக அவர் அந்த அழைப்பை விடுத்தார்.

ஸாஹிட் அந்த சவாலை விடுத்த 21 மாதங்களுக்குப் பின்னரே அந்தப் பயணம்  மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட லிம், அந்த நீர்மூழ்கி பட்டுவாடா செய்யப்பட்ட நேரத்தில் கோளாறு இருந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கப்படவில்லை என நேற்று லிம் கூறினார்.

“ஸாஹிட்டின் அழைப்பு, நீர்மூழ்கி 3.68 பில்லியன் விலையில் வாங்கப்பட்டது மீதும் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்டுக்கு கொடுக்கப்பட்ட சேவை ஒப்பந்த அல்லது ‘தரகுப்’ பணம் மீதும் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை,” என்றும் அவர் சொன்னார்.