இன்று 3,288 புதிய நேர்வுகள், 14 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,288 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 14 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், ஜொகூர், சரவாக், பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், ஜனவரி 13 முதல் தொற்று அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன.

இன்று, 14 இறப்பு சம்பவங்களில் சிலாங்கூரில் ஐந்து, சபாவில் நான்கு, ஜொகூரில் இரண்டு மற்றும் கெடா, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.

மரணமடைந்த அனைவரும் மலேசியர்கள் ஆவர்.

11 புதியத் திரளைகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 7 பணியிடம் தொடர்பான திரளைகளாகும்.

இன்று, 1,929 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 131 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸ் மாநிலத்தில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் 1,757, கோலாலம்பூர் 408, ஜொகூர் 369, சரவாக் 135, சபா 132, நெகிரி செம்பிலான் 116, மலாக்கா 92, பினாங்கு 59, கெடா 48, கிளாந்தான் 44, பேராக் 42, திரெங்கானு 24, பஹாங் 14, புத்ராஜெயா 4, லாபுவான் 3.