வழக்கறிஞர் மன்றம் : விமர்சனங்கள் இருப்பினும், தாமஸின் புத்தகத்தைத் தடை செய்யக்கூடாது

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பைத் தடை செய்வது அதிகபட்சமானது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சலீம் பஷீர், தாமஸின் புத்தகத்தின் மீது முன்னர் விமர்சனக் கருத்தைக் கொண்டிருந்த போதிலும், அப்புத்தகத்தைத் தடை செய்வதற்கான திட்டத்தால் தனது தரப்பு கலக்கம் அடைந்ததாகக் கூறினார்.

தனது கருத்துக்களைக் கூற தாமசுக்குச் சுதந்திரம் உள்ளது, அவருடன் உடன்படாதவர்கள் அவரை விமர்சிக்க முடியும்.

“இருப்பினும், இதுபோன்ற மோதல்களுக்குத் தாமஸின் நினைவுக் குறிப்பைத் தடை செய்யத் தேவையில்லை,” என்று சலீம் கூறினார்.

மத்திய அரசியலமைப்பின் 10-வது பிரிவின் அடிப்படையில், பேச்சு சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகளை இந்தப் புத்தகம் மீறவில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் வெளியானதிலிருந்து, தாமஸின் நினைவுக் குறிப்பான, ‘என் கதை : தரிசில் தேடும் நீதி’ (மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வில்டர்னஸ்) என்றத் தலைப்பிலான அப்புத்தகத்திற்கு எதிராக, பல போலிஸ் புகார்கள், சட்ட நடவடிக்கை அச்சுறுத்தல்கள் மற்றும் உள்துறை அமைச்சின் விசாரணைகள் போன்றவை அதன் தடைக்கு வழிவகுக்கக்கூடும்.

இந்தப் புத்தகத்தை விமர்சிப்பவர்களில் சலீமும் ஒருவர்.

இந்தப் புத்தகம் பேச்சு சுதந்திரத்துடன், பொது நலனையும் நீதி நிர்வாகத்தையும் சமப்படுத்தியிருக்க வேண்டும் என்று ஓர் அறிக்கையில் அவர் சொன்னார்.

தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பதாக அப்புத்தகத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

இருப்பினும், அப்புத்தகத்தைத் தடை செய்வது, வேறுபட்ட கருத்துக்களை நிராகரிக்கும் ஓர் ஏகாதிபத்திய நாட்டிலிருந்து மலேசியா வேறுபட்டது அல்ல என்ற கருத்தை உருவாக்கும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“கிட்டத்தட்ட எல்லா யோசனைகளும் பார்வைகளும் ஒருவரை புண்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.

“சிந்தனையின் பன்முகத்தன்மை மதிப்பிடப்பட வேண்டும், எல்லா தரப்பினரும் ஒருவருக்கொருவர் உடன்பட முடியாது என்றாலும், தனிநபர்களுக்குத் தங்கள் சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

“இந்தப் பார்வை நம் சமூகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தாதவரை, மலேசியர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறும் உரிமையை மதிக்க வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் கூறினார்.