அமைச்சர்களுக்கான மூன்று நாள் தனிமைப்படுத்தல் காலம் எதிர்காலத்தில் வணிகர்கள் அல்லது பொது மக்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின் முன்மொழிவை, தொற்றுநோய் வல்லுனர் டாக்டர் அடீபா கமருல்சமான் ஆட்சேபித்தார்.
“இதனை ஒரு நல்ல யோசனையாக நான் கருதவில்லை. அதற்குப் பதிலாகத் தனிமைப்படுத்தலை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது,” என்று கோவிட் -19 சிலாங்கூர் (எஸ்.டி.எஃப்.சி) தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினரான அடீபா கூறினார்.
தற்போது அமைச்சர்கள் மத்தியில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தனிமைப்படுத்துதல் ஏற்பாடு பொருளாதாரத் துறையைத் திறக்க விரிவாக்கப்படலாம் என்று ஆதாம் கூறினார்.
எவ்வாறாயினும், பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் புரிந்து கொண்டனர், ஆனால் முதலில் தொற்றைத் தீர்ப்பதன் மூலம் மட்டுமே இந்த விஷயத்தை அடைய முடியும் என்று அடீபா கூறினார்.
“10-நாள் (தனிமைப்படுத்துதல்) விதிக்கு ஒரு காரணம் உள்ளது. இது கிருமியைப் பற்றியும், அது பரவும் அபாயக் காலம் மற்றும் நோய் எவ்வாறு தோன்றும் என்பன பற்றியும் இப்போது நமக்குத் தெரிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டது,.
“அடுத்து, தொற்று மாறுபாடுகளின் வளர்ச்சி மற்றும் தற்போதையத் தடுப்பூசிகளில் அவற்றின் விளைவுகள் என்ன என்பது குறித்து உலகம் முழுவதும் கவலைகள் உள்ளன.
“எனவே, எல்லைகளைத் தன்னிச்சையாகத் திறப்பதும், ஆரோக்கியத்தை விட பொருளாதாரத்தைத் தேர்ந்தெடுப்பதும் நல்ல யோசனையல்ல,” என்று அவர் கீச்சகத்தில் தெரிவித்தார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஒரு முடிவை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சரை மூன்று நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்த அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று பல எம்.பி.க்கள் நேற்று கோரினர்.
கோவிட் -19 நோய்ப் பாதிப்பின் காலம் இரண்டு முதல் 10 நாட்கள் வரை என்று உலகச் சுகாதார அமைப்பு விளக்குகிறது.
இம்மாத இறுதியில், கோவிட் -19 தடுப்பூசியை மலேசியா பெறும், அதனையடுத்து தடுப்பூசி செயல்முறை மார்ச் மாதத்தில் தொடங்கும்.
கோவிட் -19 தொற்றின் புதிய மாறுபாட்டிற்கு எதிராக, சில தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்காது என்ற கவலைகள் உள்ளன.
கோறனியின் புதிய வகைகளுக்கு எதிராகக் குறைந்தபட்சப் பாதுகாப்பை வழங்கியதாகத் தரவுகளைக் காட்டியதை அடுத்து, தென்னாப்பிரிக்கா இந்த வாரம் <em>அஸ்ட்ராசெனெகா</em>
தடுப்பூசி திட்டத்தை நிறுத்தியது.
ஆரம்ப முடிவுகளைக் கண்காணிக்கத் தடுப்பூசி செயல்முறைகளைப் படிப்படியாக தொடங்குவதாக தென்னாப்பிரிக்க அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.