`3 நாள் தனிமைப்படுத்துதல் உத்தரவை இரத்து செய்யுங்கள்` – மருத்துவக் கல்வி கழகம், எம்.எம்.ஏ.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின், வெளிநாட்டு உத்தியோகபூர்வப் பயணங்களில் இருந்து திரும்பும் அமைச்சர்கள் 3 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு 10 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற அறிக்கை, தங்களைக் கலக்கமடையச் செய்துள்ளதாக மலேசிய மருத்துவக் கல்விக் கழகம் கூறியுள்ளது.

“அந்த விலக்கு உத்தரவை இரத்து செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் – அதற்கு மாறாக, அறிவியல் சான்றுகள் கிடைக்கும் வரை, அனைவருக்கும் 10 நாள் தனிமைப்படுத்தலை செயல்படுத்த வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.

மலேசிய மருத்துவக் கல்விக் கழகம், 11 கல்லூரிகள் மற்றும் 15 பிரிவுகளை உள்ளடக்கியது, இது மலேசிய மருத்துவ வல்லுனர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.

அந்தக் கல்வி கழகத்தின் கூற்றுப்படி, அவர்கள் சுகாதார அமைச்சரின் விலக்கு உத்தரவையும், 3 நாள் தனிமைப்படுத்துதல் விதியை மற்ற அனைவருக்கும் – வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கும்- விரிவுபடுத்துவதற்கான டாக்டர் ஆதாமின் திட்டத்தையும் ஒருமனதாக எதிர்க்கின்றனர்.

“அனைத்து எஸ்.ஓ.பி.-க்களும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

“நாட்டிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் 10 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது 10 நாட்கள் கண்காணிப்பு மற்றும் சோதனைக்குப் பிறகு பரவும் ஆபத்து மிகக் குறைவு (1 விழுக்காட்டிற்கும் குறைவானது) என்பதைக் காட்டுகிறது.

“கோவிட் -19 தொற்றுக்கான நோய்ப்பாதிப்பு காலம் சராசரியாக ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை இருக்கும், ஆனால் அது 14 நாட்கள் வரை நீடிக்கும். எனவே, அறிகுறிகளைக் கண்டறிய மூன்று நாட்கள் போதாது. நாட்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவுக்குப் பொது சுகாதார ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கம் இருக்க வேண்டும்,” என்று அது மேலும் கூறியது.

“மலேசியர்கள் மற்றும் வணிகங்களின் நலனுக்காகப் பொருளாதாரத்தை மீண்டும் திறக்க வேண்டும் எனும் அழுத்தம் உள்ளதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் இதை முதலில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே செய்ய முடியும்.

“புதிய வகை கோறனிகளைக் கொண்டுவருவதற்கான ஆபத்து உள்ளதால், பயணக் குமிழி குழுவிற்கு நம் நாட்டின் எல்லைகளை அரசாங்கம் திறந்துவிடக் கூடாது, நமது சுகாதார அமைப்பை மூழ்கடிக்கக்கூடாது,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னதாக, மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) தலைவர் டாக்டர் எம் சுப்பிரமணியம், அமைச்சரின் அண்மைய உத்தரவுக்கு தனது தரப்பும் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்துள்ளது என்றார்.

“இது இரட்டை தரநிலைகள், எம்.எம்.ஏ. புதிய உத்தரவை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

“தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (சட்டம் 342) கீழ், வெளியிடப்பட்ட புதிய உத்தரவு கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும், மேலும் தொற்றுநோயை நிர்வகிப்பதில் ஒவ்வொரு முடிவும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அமைச்சரின் புதிய உத்தரவு மக்களைக் கோபப்படுத்துகிறது. மக்கள் எஸ்.ஓ.பி.-யைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் விரும்பினால், அது உதாரணமாக விளங்க வேண்டும், அதே விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

“இந்த இரட்டை தர நடைமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.