அனைத்து ஊழியர் சேமநிதி (ஈபிஎஃப்) பங்களிப்பாளர்களும், ஐ-சினார் வசதியின் கீழ், கணக்கு 1-லிருந்து தங்கள் பணத்தை வெளியாக்க முடியும்.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்டக் கருத்துக்களைத் தொடர்ந்து, பிரதமர் முஹைதீன் யாசின் ஆலோசனையின் பேரில், முன்னர் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
ஐ-சினாரின் கீழ், தங்கள் கணக்கு 1-இல், RM100,000-க்கும் குறைவாக வைத்திருக்கும் பங்களிப்பாளர்கள், ஆறு மாதங்களில் கட்டங்கட்டமாக RM10,000 வரை திரும்பப் பெறலாம் – முதல் கட்டத்தில் RM5,000 பெறலாம்.
இதற்கிடையில், RM100,000-க்கும் அதிகமான சேமிப்பு உள்ளவர்கள், தங்கள் கணக்கு 1-ன் நிலுவையில் 10 விழுக்காடு வரை, அதிகபட்சம் RM60,000 வரையில், ஆறு மாதங்களில் கட்டங்கட்டமாகத் திரும்பப் பெறலாம் – முதல் கட்டத்தில் RM10,000 வரை பெறலாம்.
எவ்வாறாயினும், அண்மைய இந்தப் புதுப்பிப்பைச் செயல்படுத்த ஊழியர் சேமநிதி வாரியத்திற்குச் சிறிது கால அவகாசம் தேவை என்று ஜாஃப்ருல் கூறினார்.
முந்தைய ஐ-சினார் விண்ணப்பத்தாரர்களுக்கு, அவர்களின் விண்ணப்பம் விரைவில் தானாகவே அங்கீகரிக்கப்படும்.
முன்னதாக, ஐ-சினார் வேலை இழந்த அல்லது வருமானம் 30 விழுக்காடு குறைந்த பங்களிப்பாளர்களுக்கு மட்டுமே இருந்தது.
ஐ-சினார் நிபந்தனைகளை இரத்து செய்ய வேண்டுமென்பது, அம்னோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.