கெராக்கான் பி.என்.-இல் இணைந்தது

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான, தேசியக் கூட்டணியில் (பி.என்.), கெராக்கான் ராக்யாட் மலேசியா (கெராக்கான்) இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது.

“கெராக்கான் ராக்யாட் மலேசியா, இப்போது பி.என். எனப்படும் ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகும்.

“மக்கள் நலனை உறுதி செய்யவும், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் பி.என். உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.

“செழிப்பு மற்றும் மிதமான தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மக்கள் அரசாங்கத்தை அமைப்பதில் பி.என்.-உடன் இணைந்து கெராக்கான் செயல்படும்,” என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியடைந்த பின்னர், கெராக்கான் பாரிசான் உடனான உறவுகளைத் துண்டித்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தேசியக் கூட்டணியில் ஓர் அங்கமாக ஏற்றுக்கொள்ள, பி.என். உச்ச மன்றம் ஒப்புக் கொண்டதாகக் கூறி, முஹைதீனிடமிருந்து ஒரு கடிதம் கட்சிக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டணியில் கெராக்கான் இணைவதற்கான ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்ததாக முஹைதீன் தனது முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை பல இன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல் கட்சிகளின் கூட்டணியாக பி.என்.-ஐ பலப்படுத்த முடியும் என்று தான் நம்புவதாக அவர் விளக்கினார்.

“அமைதியான, வளமான மற்றும் நிலையான மலேசியாவைக் கட்டியெழுப்ப பி.என். உறுதியளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், சுயநலத்தை விட்டு, நாட்டை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்க அரசியல்வாதிகளுக்கு லாவ் அழைப்பு விடுத்தார்.

“அரசியல் விவேகமாகவும் எந்த விரோதமும் இல்லாமல் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள், தங்கள் சொந்த ஆசைகளுக்கும் மேலாக நாட்டை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

“இந்தப் புதியக் கூட்டணி ஒற்றுமை மற்றும் புரிதலுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.