1988-ஆம் ஆண்டு அம்னோ தலைவர் அந்த ‘இரகசியக் கணக்கை’ விளக்கலாம் – ஷாரில்

கட்சி சம்பந்தப்பட்ட இரகசிய வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து, கடந்த கால அம்னோ தலைவர்கள் அதிகம் அறிந்திருக்கலாம் என்று அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார்.

சில அம்னோ தலைவர்கள் வங்கிக் கணக்கு இருப்பதைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியதை அடுத்து அவர் இவ்வாறு சொன்னார்.

1988-ஆம் ஆண்டில், கணக்கு திறக்கப்பட்டதாகக் கூறப்படும் போது, அப்போது கட்சியின் தலைவராக இருந்த டாக்டர் மகாதிர் முகமதுதான் அதுபற்றி நன்கு அறிந்த தலைவர் என்று ஷாரில் கூறினார்.

“எனக்குத் தெரிந்தவரை, அம்னோவில் அத்தகையக் கணக்கு எதுவும் இல்லை.

“ஆகையால், 1988-ஆம் ஆண்டிலிருந்து, வங்கிக் கணக்கு எதுவாக இருந்தாலும், 1988-ஆம் ஆண்டின் தலைவர் (மகாதீர்) விளக்க உதவலாம், ஏனெனில் அவர் இந்த விஷயத்தைப் பற்றி அதிகம் அறிந்திருப்பார்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பதிவு செய்யப்படாதப் பல கிளைகள் இருப்பதால் நீதிமன்றத்தால் கட்சி செல்லாது என்று அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில், மகாதீர் அம்னோவை மீண்டும் பதிவு செய்தார், அதே ஆண்டில் அந்த வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டில், மகாதீர் கட்சியை வழிநடத்தியபோது, ​​அவர் உட்பட மூன்று அறங்காவலர்களைக் கொண்டிருந்தக் கட்சியின் கணக்கில் அரசியல் பங்களிப்புகள் வழங்கப்பட்டதாக மகாதீர் கூறியிருந்தார்.

“அறங்காவலருக்கென ஒரு கணக்கு உள்ளது. குறிப்பாக, தேர்தல்களுக்கான அனைத்து பங்களிப்புகளும் இந்தக் கணக்கில் வைக்கப்படுகின்றன.

“அறங்காவலர்கள் அம்னோ சார்பாகப் பங்கு வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் என்றும் பெயரிடப்பட்டுள்ளனர்,” என்று மகாதீர் கூறினார்.

இருப்பினும், இது கேள்விக்குரிய இரகசிய வங்கி கணக்கா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சர்ச்சைக்குரிய அந்த வங்கிக் கணக்கிற்கு விளக்கமளிக்க மற்றொரு முன்னாள் அம்னோ தலைவர் இருப்பதற்கான வாய்ப்பை ஷாரில் நிராகரிக்கவில்லை.

“ஆனால், அத்தகைய கணக்கு இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், அது 2015-ல் துன் மகாதீர் கூறிய ‘1988 வங்கிக் கணக்கிலிருந்து’ வேறுபட்டது என்றால், இதுபற்றிய விவரம் அறிந்த முன்னாள் அம்னோ தலைவர்களும் உதவலாம்.

“ஏனென்றால், தோக் மாட் (அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான்) கூறியது போல், ஊடகங்கள் அறிவித்தபடி கட்சியின் இரகசியக் கணக்கு என்று கருதப்படும் எந்தவொரு கணக்கும் இன்றைய கட்சி நிர்வாகத்திற்குப் தெரியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

1எம்டிபி தொடர்பான ஒபியு ஹோல்டிங்ஸ் (Obyu Holdings) வழக்கு விவகாரத்தின் போது, இரகசிய வங்கிக் கணக்கின் இருப்பை பொது வழக்கறிஞர் தரப்பு எழுப்பியது.

அரசாங்கம் கைப்பற்ற விரும்பும் நிதி கட்சிக்குச் சொந்தமானது என்று அம்னோ கூறுகிறது.

ஓர் எழுத்துப்பூர்வ அறிக்கையில், வங்கிக் கணக்கு தணிக்கை செய்யப்படவில்லை என்றும் அரசியல் பங்களிப்புகளைப் பெற அது பயன்படுத்தப்படுவதாகவும் அரசு தரப்பு கூறியது.

இந்த விவகாரம் சங்கச் சட்டத்தை மீறியதாகவும், தணிக்கை செய்யப்படாத பணத்திற்கான அம்னோவின் கோரிக்கைகள் சங்கச் சட்டத்தையும் மீறக்கூடும் என்றும், கட்சி பதிவு செய்யப்படாமல் போகலாம் என்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.