இம்மாத இறுதியில் பிரதமர் முதல் நபராகத் தடுப்பூசியைப் பெறுவார்

இந்த மாத இறுதியில், மலேசியாவிற்குத் தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததும், பிரதமர் முஹைதீன் யாசின் கோவிட் -19 தடுப்பூசியை முதலில் பெறுவார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுதீன் இதனை உறுதிப்படுத்தினார்.

“ஆம், ஃபைசர் (Pfizer) தடுப்பூசி போட்ட முதல் நபராகப் பிரதமர் இருப்பார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன், ஏனெனில் தடுப்பூசி பாதுகாப்பானது என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க அவர் விரும்புகிறார்,” என்று நேற்று இரவு பெர்னாமா டிவி ஒளிபரப்பிய ‘ருவாங் பிச்சாரா’ நிகழ்ச்சியில் அவர் கூறினார். .

இம்மாத இறுதியில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என்று பிப்ரவரி 4-ல் முஹைதீன் கூறியிருந்தார். நாட்டின் 80 விழுக்காடு அல்லது 26.5 மில்லியன் மக்களுக்கு, இலவசமாக, மூன்று கட்டங்களில் வழங்குவதற்கு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான முதல் கட்டம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நேரடியாக ஈடுபட்டுள்ள மொத்தம் 500,000 முனைமுகத் தொழிலாளர்களுக்கானது; இரண்டாவது கட்டத்தில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், உயர் ஆபத்துள்ள அல்லது இதய நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய் பிரச்சினைகள் உள்ள குழுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும்.

மூன்றாவது கட்டம், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இவ்வாண்டு மே முதல் அடுத்தாண்டு பிப்ரவரி வரை வழங்கப்படும்.

மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, மலேசியா கோவிட்-19 தடுப்பூசியைச் சற்று தாமதமாகப் பெற்றது என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கைரி, அதற்குக் காரணம் மலேசியா ஓராண்டு முழுவதும் ஒரு திறமையான மற்றும் பயனுள்ள நோய்த்தடுப்புத் திட்டத்தைத் திட்டமிடுவதில் அதிகக் கவனம் செலுத்தியது, தடுப்பூசி இந்த மாத இறுதியில் பெறப்படும் என்றார்.

இந்தோனேசியாவுக்குச் ‘சினோவாக்’ தடுப்பூசி ஆரம்பத்திலேயேக் கிடைத்தது, ஏனெனில் அந்நாடு ஒரு சோதனைத் தளமாக திகழ்ந்தது; அதே நேரத்தில், சிங்கப்பூர் உற்பத்தியாளரான ‘ஃபைசர்-பயோஎன்டெக்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது.

இதன் காரணமாக, அந்த இரு நாடுகளும் தயாரிப்பாளர்களிடமிருந்து முன்னுரிமை பெற்றன என்றார் அவர்.

“மலேசியா மிகவும் தாமதமாகவில்லை என்று நான் நினைக்கிறேன், நாம் ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளோம். நாம் அதைப் பெறும்போது (தடுப்பூசி), ஒரு தடுப்பூசி திட்டத்தை உருவாக்க முடியும். பயனான வகையில் ஊசி போட முடியவில்லை என்றால் நிறைய தடுப்பூசிகள் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா