பிப்ரவரி 1-ம் தேதி, ஆட்சி கவிழ்ப்பு நடத்திய மியான்மர் இராணுவ அரசாங்கம், மூன்று கடற்படைக் கப்பல்களை அனுப்பி தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்ல முன்வந்ததை அடுத்து, மலேசியா 1,200 மியான்மர் கைதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பவுள்ளது என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் இரண்டு வட்டாரங்களும் ராய்ட்டர்ஸ் –இடம் தெரிவித்தன.
கோலாலம்பூரில் உள்ள தனது தூதரகம் மூலம், கடந்த வாரம் மலேசியக் குடிநுழைவுத் தடுப்பு மையத்தில் உள்ள தனது கைதிகளைத் திரும்ப அழைத்து வருவதற்கான வாய்ப்பை மியான்மர் ஏற்படுத்தியதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த இரு வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுபவர்களில் அகதிகள் குழுவினரும் உள்ளனரா என்ற கேள்விகளுக்கு அந்த அதிகாரி பதிலளிக்கவில்லை.
முன்னர் தடுத்து வைக்கப்பட்டவர்களில், இன மோதல்கள் மற்றும் மியான்மர் இராணுவத்தால் நிகழ்த்தப்படும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிய சின், கச்சின் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனக் குழுவினரும் அடங்குவர்.
வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படும் ரோஹிங்கியாக்களைத் தவிர்த்து, 100-க்கும் மேற்பட்ட இனங்களை மியான்மர் அங்கீகரிக்கிறது.
பிப்ரவரி 21-ஆம் தேதி, அக்கடற்படைக் கப்பல்கள் மலேசியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவை நாடு திரும்பும் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மியான்மர் தூதரகத்தின் தொழிலாளர் இணைப்பு அதிகாரியான, வின் மின் சோவும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
எவ்வாறாயினும், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து கோரலுக்குப் பதிலளிக்கவில்லை.
- ராய்ட்டர்ஸ்