கோவிட் -19 தடுப்பூசி திட்டம், சட்டவிரோதக் குடியேறிகள் (பாட்தி) மீது மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவர்களுக்குப் பொது மன்னிப்பு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ அழைப்பு விடுந்துள்ளார்.
கடந்த ஆண்டு, கோவிட் -19 சோதனையைச் செய்ய முன்வந்தால், நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தப் பின்னர், குடிநுழைவுத் துறை பல வெளிநாட்டினரைத் தடுத்து வைத்தது இதற்கு காரணம் என்று சார்லஸ் கூறினார்.
மலேசியாகினியுடன் பேசிய சார்லஸ், வெளிநாட்டவர்கள் மீண்டும் ‘ஏமாற்றப்படுவதை’ விரும்பவில்லை என்று கூறினார்.
தற்போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத 3.5 மில்லியன் வெளிநாட்டினர் நாட்டில் உள்ளனர்.
“ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்குவது வரவேற்கத்தக்கது, ஆனால் அவர்களுக்கு குடிநுழைவுத்துறை பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.
“நோய்த்தடுப்பு திட்டம் முறையாகச் செயல்பட, குடிநுழைவுத்துறை ஓர் உறுதியான அறிக்கையை வெளியிடுவதோடு, அவர்களின் முந்தைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த செயல்முறைக்கு உதவுவதற்காக, முதலாளிகளையும் சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்குமாறு சார்லஸ் கேட்டுக்கொண்டார்.
“ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதற்காக முதலாளிகள் மீது வழக்குத் தொடரக்கூடாது,” என்று அவர் கூறினார்.
குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட, மலேசியாவில் வாழும் அனைத்து நபர்களுக்கும் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நேற்று அமைச்சரவை அறிவித்தது.
இந்த விஷயத்தை, கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் பாதுகாப்பு சிறப்புக் குழுவின் (ஜே.கே.ஜே.ஏ.வி.) இணைத் தலைவர் கைரி ஜமாலுதீன் அபுபக்கர் உறுதிப்படுத்தினார்.
“கொள்கையளவில், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு இலவசத் தடுப்பூசிகளை வழங்க அமைச்சரவை ஒப்புக்கொண்டது.
“இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து குழு மேலும் விவாதிக்கும். உதவிக்கு மாநில அரசு, வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நாங்கள் தொடர்புகொள்வோம்,” என்று அவர் கீச்சகத்தில் தெரிவித்துள்ளார்.