‘டாக்டர் எம் இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டும்’, இந்தப் பிரச்சினை எழ அவசியமில்லை

டாக்டர் மகாதீர் மொஹமட் இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டும் என்றத் திட்டம் இனி தோன்றத் தேவையில்லை; ஆனால், எதிர்க்கட்சியினர் பொதுத் தேர்தலில் (ஜி.இ.) வென்றால், அந்த முன்னாள் பிரதமருக்கு அப்பதவியை வகிக்க வாய்ப்புள்ளது என்று அமானா மூலோபாய இயக்குநர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார்.

ஜி.இ.15-இல் வெற்றி பெற, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை சுல்கிப்ளி வலியுறுத்தினார்.

ஜி.இ.15-க்கான பி.எச்.-இன் பிரதமர் வேட்பாளர் அன்வர் இப்ராஹிம், மகாதீர் வழிகாட்டி அமைச்சராக அல்லது மூத்த அமைச்சராக பதவி வகிக்கலாம் என்று அவர் கூறினார்.

“டாக்டர் மகாதீர் இடைக்காலப் பிரதமராக முடியும் என்ற கருத்து இனி தோன்றாது, ஆனால் அவர் விரும்பினால், நாங்கள் வென்றால், அவர் ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும்.

இது ஜி.இ.15-ஐ எதிர்கொள்ள, வெற்றிக்கான ஒரு சூத்திரமாக பி.எச்.-இல் இருக்கலாம்,” என்று அவர் கூறியதாக, மலேசிய இன்சைட் இன்று மேற்கோளிட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பி.எச். நிர்வாகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், மகாதீருக்கும் அன்வருக்கும் கருத்து வேறுபாடு தகராறுகள் நீங்கவில்லை.

“பி.எச். பிளஸ்” என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியிடம் (பி.என்.) இருந்து அதிகாரத்தைத் திரும்பப் பெறும் முயற்சியில், மகாதீர் பிரதமராகவும், அன்வர் துணைப் பிரதமராகவும் இருக்க வேண்டும் என்ற திட்டத்தைப் பி.கே.ஆர். நிராகரிக்கிறது.

இதற்கிடையில், வாரிசான், பெஜுவாங், மற்றும் மூடா ஆகிய அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய “பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு” மூலம் மட்டுமே, பி.எச். ஓர் அரசாங்கமாகத் திரும்ப முடியும் என்று சுல்கிப்ளி வலியுறுத்தினார்.

“எதிராளியின் பலவீனத்தைப் பொறுத்து மட்டும் இருப்பது போதாது. நமது மூலோபாயம், நம் சொந்த பலத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்; மேலும் தேசியக் கூட்டணி, தேசிய முன்னணி அல்லது முவாஃபாக்கட் நேஷனல் ஆகியவை ஜி.இ.15-க்கு முன்னர், பிரிந்து கிடந்தாலும், நிச்சயமாக நாம் அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது,” என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், பி.எச். இன்னும் வலிமை கொண்டுள்ளது என்றும், அதன் குறிக்கோள், குறுகிய இனப் பாகுபாடு பிரச்சினை அல்லாமல், ஒட்டுமொத்த மலேசியாவை உள்ளடக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.