மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க, மறுபயன்பாட்டு பைகள் விற்பனையில் தமிழ்ப்பள்ளி தலைமையாசியர்

பினாங்கு, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர், சங்கா சின்னையா, தனது பள்ளியின் 83 ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வாங்க,  மீண்டும் பயன்படுத்தக்கூடியத் துணிப் பைகளை விற்பனை செய்து RM20,000-க்கும் அதிகமான தொகையைச் சேகரித்துள்ளார்.

இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தபோது, தனது பள்ளியைச் “சூழலியல்-போராளி” என்றப் பெயரைப் பெறச்செய்து, பலரின் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ​​தனது புதியப் பள்ளியான பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி மற்றும் இயங்கலையில் படிக்க போதுமான இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியில் அவர் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

2019-ஆம் ஆண்டில், பள்ளிச் செலவுகளை ஈடுகட்ட, தனது மாணவர்களுக்குப் பயிர் செய்யவும் அதனை விற்று பொருள் ஈட்டவும் பயிற்சியளித்ததோடு, நெகிழிப் பைகள் பயன்பாட்டைத் தடைசெய்ததற்காகவும் கல்வி அமைச்சின் பாராட்டைப் பெற்றவர் இவர்.

ஐ.நா. நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்குகளின் அளவுகோல்களைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி ஒரு “சூழலியல்” மாதிரி பள்ளி என்று அழைக்கப்பட்டது.

தற்போது, பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியிலும், தலைமையாசிரியர் சங்கா அதேக் கருத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

ஆனால், இம்முறை சிக்கல் சற்று வேறுபட்டது, அவசரமானது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தனது 130 மாணவர்கள் இயங்கலை கற்றல் வகுப்புகளில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய அவர் முயற்சித்து வருகிறார்.

அந்த இலக்கை அடைய, பள்ளியின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தத்துவத்திற்கு இணங்க, 1,500 மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பருத்தியிலான பைகளை விற்று, அவர் பணம் திரட்டி வருகிறார்.

ஜனவரி 30-ல் தொடங்கிய ‘ஒரு மாணவர்; ஒரு கணினி – துணிப்பைத் திட்டம்’ முதல் வாரத்திலேயே, 1,000 பைகள் விற்பனை மற்றும் நன்கொடையின் வழி வெற்றிகரமாக RM24,000 திரட்டியது, ஒரு பையின் விலை RM10 மட்டுமே.

அந்தப் பணத்தைக் கொண்டு, ‘சம்சோங்’-லிருந்து, தலா RM529 விலையில், 40 வரைப்பட்டிகைகளுக்கு, 15 விழுக்காடு தள்ளுபடியுடன் அளிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இவ்வாரம் அந்தச் சாதனங்களைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இரண்டாவது தொகுதியில், 2,000 பைகள் மேலும் 43 சாதனங்களுக்காக நிதி திரட்ட தயாராகி வருகின்றன, அவை இந்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் சங்கா.

“பெரும்பாலான மாணவர்கள் தங்கள் பெற்றோரின் திறன்பேசிகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதன் காரணமாக, நாங்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

“இந்தக் கடினமான சூழ்நிலையில், எங்களுக்கு உதவ முன்வந்த தாராள நன்கொடையாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் வழி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி பைகளை விற்று, தொடர்ந்து நிதி திரட்ட முயல்வதாக சங்கா கூறினார். தேவைப்படும் மாணவர்களுக்காக வரைப்பட்டிகைகள் வாங்குவதும், இணையத் தரவை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என்றார் அவர்

ஆர்வமுள்ளவர்கள், சிஐஎம்பி வங்கிக் கணக்கில் (CIMB Bank – PIBG SJK(T) Bayan Lepas) – 80-0387729-3 பங்களிப்பதன் மூலம், அப்பள்ளியின் உன்னத நோக்கத்திற்கு உதவலாம் அல்லது 019-449-4914 என்ற எண்ணில் தலைமையாசிரியர் சங்காவைத் தொடர்பு கொள்ளலாம்.