அகதிகளைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் மலேசியாவின் நோக்கத்தை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (யு.என்.எச்.சி.ஆர்) ஆட்சேபித்துள்ளார்.
தற்போது குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,200 மியான்மர் நாட்டினரை, அந்நாட்டின் 3 இராணுவக் கப்பல்களில், மலேசியா திருப்பி அனுப்பவுள்ளது என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து இதனை யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்தது.
“சர்வதேசப் பிணைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டாயப்படுத்தித் திருப்பியனுப்பும் கொள்கை மலேசியாவிற்கும் பொருந்தும்,” என்று யு.என்.எச்.சி.ஆர். கூறியதாக ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
யு.என்.எச்.சி.ஆரின் கூற்றுப்படி, மலேசிய அதிகாரிகள் இதுவரை அவர்களிடம் இதுபற்றி அறிவிக்கவில்லை, ஆனால் மலேசியாவில் உள்ள கைதிகளின் “எண்ணிக்கை” குறித்து அது அக்கறை கொண்டுள்ளது, அதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, சர்வதேசப் பாதுகாப்பு தேவைப்படலாம்.
அந்த அறிக்கையின்படி, மலேசியாவில் உள்ள தடுப்புக்காவல் மையங்களுக்குள் நுழைவதற்கு, யு.என்.எச்.சி.ஆருக்கு 2019 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது; எனவே இது அகதிகளை அடையாளம் காண்பதிலும் புகலிடம் கோருவோருக்கு உதவுவதிலும் அந்த அமைப்பிற்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த மியான்மர் நாட்டினரில், மியான்மர் இராணுவம் நடத்திய இன மோதலில் இருந்து தப்பி ஓடிய கச்சின், சின் மற்றும் ரோஹிங்கியா இனங்களும் அடங்கும்.
ரோஹிங்கியாக்களை அகதிகள் என்ற நிலையில் மலேசியா அங்கீகரிக்கவில்லை, அவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகள் என வகைப்படுத்துகிறது.
முன்னதாக, அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அரசாங்கம் கவனமாக இருக்கவேண்டும், குறிப்பாக ரோஹிங்கியா இனக்குழு சம்பந்தப்பட்டவர்களை எனச் சமூகம் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டு வள மையம் (Reach-ரீச்) கூறியிருந்தது.
ஆட்சி கவிழ்ப்பு நிகழ்ந்த அந்நாட்டில், இன்னும் நூறாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலைமை மோசமடையலாம் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.