மிரி மத்தியக் காவல்நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் போன்று, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜுரைதா கமருதீன் உள்துறை அமைச்சை வலியுறுத்தினார்.
பாலியல் வன்முறையைச் செய்ததற்காகக் குற்றவாளியின் மீதும், அலட்சியம் காட்டியதற்காகக் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுவிட்டதால், இச்சம்பவத்தை எளிதாக மறந்துவிடக்கூடாது என்று ஜுரைடா கூறினார்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க, மிரி மத்தியக் காவல்நிலையக் கட்டறையில், மறைக்காணிகளைப் பொறுத்தி, கைதிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல்துறையும் உள்துறை அமைச்சும் ஆவணச் செய்ய வேண்டும்.
“பூட்டப்பட்ட சிறைக்கட்டறைகளில் தேவையற்ற சம்பவங்கள் நிகழ்வது இது முதல் முறையல்ல,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சிறைக்கட்டறைகள் பாலியல் வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்த போதிலும், ஜனவரி 9-ஆம் தேதி, சக ஆண் கைதியால் அச்சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானார்.
தனது சிறைக்கட்டறையின் சாவியைச் சம்பந்தப்பட்ட கைதி வைத்திருந்ததாக அச்சிறுமி கூறினார்.
பொறுத்தப்பட்டிருந்த மறைக்காணிகள் கண்காணிப்புக்கு மட்டுமே இருந்ததால், அதில் எதுவும் பதிவாகவில்லை என்பதால் சம்பவம் குறித்த பதிவுகள் ஏதும் இல்லை என்று போலீசார் கூறினர்.
ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அக்குற்றவாளி, பின்னர் தனது மனுவை மீட்டுக்கொண்டார்.
கவனக்குறைவு குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு காவல்துறை அதிகாரிகளும், இப்போது அதே வழக்கறிஞரால் பாலியல் வன்கொடுமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள்.
ஜுரைடா, தனது அறிக்கையில், காவல்நிலையங்களில் மறைக்காணிகளின் செயல்பாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒரு காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை நடைபெறுவது வழக்கத்திற்கு மாறானது, இது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டிய இடமாகும்.
எனவே, பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக மட்டுமல்லாமல், காவல்துறையையும் களங்கப்படுத்திய அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.