எம்.பி. குவாந்தான் : பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவுபடுத்தவும்

காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவில் சீராக்க வேண்டுமென்றக் கோரிக்கையைச் சட்டமியற்றுபவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுசியா சல்லே கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் அதிகாரிகள், கடைசி தற்காப்புக் கோட்டையாக இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.

“அதனால்தான் எங்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் சட்டம் தேவை. பொதுச் சேவையில் இருப்பவர்கள், குறிப்பாக முன் வரிசையில், இந்தத் தொற்றுநோய் காலத்தின் போது நமது பலத்தின் தூண்கள்.

“அவர்களின் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 11-ம் தேதி, தன்னை ஒரு சாலைத் தடுப்பில் நிறுத்தி, தனது தகவல்களைப் பெற்ற ஒரு காவல்துறையாள், பின்னர் ‘அறிமுகம் செய்துகொள்ளலாமா’ என்று குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியதாகப் பெண் ஒருவர் புகார் அளிந்திருந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், காவல்துறையினருடன் சாலைத் தடுப்புகளில் நேர்ந்த தங்கள் அனுபவங்களை அதிகமானப் பெண்கள் பகிர்ந்துகொண்டனர், குறிப்பாகப் பாலியல் துன்புறுத்தல்.

ஒரு சம்பவத்தில், ஓர் அதிகாரி ஒரு பெண்ணிடம் உள்ளாடை அணியவில்லையா என்று கேட்டதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

கோவிட்-19 பரவலைத் தடுக்க, ஜனவரி 13-ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி.) அமல்படுத்தியதைத் தொடர்ந்து காவல்துறையினரின் சாலைத் தடுப்புகள் அதிகரித்தன.

காவல்துறையினரின் நற்பெயர் கெடாமல் இருக்க, இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோரை ஃபுசியா சல்லே கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையில், பாலியல் துன்புறுத்தல் மசோதா குறித்த சமீபத்தியத் தகவல்களை வழங்குமாறு, மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரினா ஹருனை, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு, அம்மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஜனவரி 7-ஆம் தேதி ரீனா கூறியிருந்தார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு, அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்தாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருந்த, பாலியல் துன்புறுத்தல் மசோதா, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சியால் ஒத்திவைக்கப்பட்டது.