வெவ்வேறு சாலைத் தடுப்புகளில், தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் அதன் உறுப்பினர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் தரநிலைகள் இணக்க ஒருமைப்பாட்டுத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர், ஸம்ரி யஹ்யா, கோலாலம்பூர் மற்றும் புக்கிட் அமான் ஜிப்ஸ் அணியினரின் உதவியுடன், கடமையில் இருக்கும்போது நடத்தை மற்றும் இணக்க நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
“அந்தப் பெண்களிடம் இருந்து, சாட்சியங்களையும், அவர்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் காவல்துறையினர் பற்றிய தெளிவான தகவல்களையும் ஜிப்ஸ் எடுத்துக்கொண்டது.
“சம்பந்தப்பட்ட உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவர்களிடம் இருந்து விளக்கங்கள், ஆதாரங்கள் அல்லது ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன,” என்று ஸம்ரி மலேசியாகினியிடம் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் (பி.கே.பி) தொடர்ந்து, அமலில் இருக்கும் சாலைத் தடுப்புகளில் நிறுத்தப்பட்ட இரண்டு பெண்கள், காவல்துறையாட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நேற்று கீச்சகத்தில் தெரிவித்தனர்.
இதற்கிடையில், புக்கிட் அமானின் பாலியல் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகள் (D11), குற்றப் புலனாய்வுத் துறை கண்காணிப்பாளர், சித்தி கம்சியா ஹாசான் இது போன்ற அனுபவம் உள்ளவர்களை முன் வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.