அரசாங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு தேசியக் கல்வி நடவடிக்கை மன்றம் அமைப்பதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும்.
கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், நாட்டின் கல்வி நெருக்கடிக்குத் தீர்வு காண, அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 12 திட்டங்களில் இதுவும் ஒன்று என்று முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.
கல்வி என்பது ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்றும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒருங்கிணைந்த, ஒத்துழைப்பு மற்றும் முழுமையான முயற்சிகள் தேவை என்றும் மாஸ்லீ கூறினார்.
“ஆகையால், கல்வி சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கல்வியமைச்சு மட்டும் பொறுப்பேற்பது பொருத்தமானதல்ல, ஏனெனில் இல்லமிருந்து கற்றல் கற்பித்தல் (பிடிபிஆர்) நடைபெறுகிறது, பள்ளியில் அல்ல. இணைய அணுகல், மின்னணு சாதனங்கள் மற்றும் பயனுள்ள கற்றல் உள்ளடக்கம் ஆகியவற்றில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு தேவை,” என்று அவர் கூறினார்.
மஸ்லீ சமர்ப்பித்தப் பரிந்துரைகளில் இணைய அணுகல், கல்வி தொலைக்காட்சி அல்லது கல்வி வானொலி பிரச்சினையில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் (கே.கே.எம்.எம்.) தலையீடும் அடங்கும்.
“இதற்கிடையில், கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு கே.கே.எம்.எம்.-இன் அதிகார வரம்பாகும், ஆனால் பொருட்கள் கல்வி அமைச்சால் வழங்கப்பட வேண்டும். கல்வியமைச்சின் மூலம், டிவி பெண்டிடிக்கான்-க்கான பொருட்கள், ஒரு தரப்பினரின் ஏகபோகமாக இல்லாமல், பல்வேறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குவதன் மூலம் பெருக்கப்பட வேண்டும்.
“ஃபீனாஸ் (FINAS) மற்றும் எம்.டி.இ.சி. (MDEC- மலேசியா டிஜிட்டல் பொருளாதாரக் கூட்டுறவு) மானியங்கள் கூட இந்தப் பொருட்களின் வெளியீட்டிற்கு நிதியளிக்க பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார்.
தவிர, கல்வி ஒளிபரப்புப் பொருட்களை வெளியிட உயர்க்கல்வி அமைச்சையும் அவர் பரிந்துரைத்தார்.
“பல்கலைக்கழக வல்லுனர்களையும் இதற்குப் பயன்படுத்தலாம். அவர்களின் ஆராய்ச்சி மானியங்கள் இந்தப் பொருட்களின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படலாம்.
“பல்கலைக்கழக மாணவர்களையும் அவர்களின் உடன்பிறப்புகள் அல்லது அண்டைவீட்டார் மற்றும் சுற்றுவட்டாரக் குழந்தைகளுக்கு, எஸ்ஓபி நடைமுறைகளுக்கு ஏற்ப கற்பிக்க அணிதிரட்டலாம்,” என்று அவர் கூறினார்.