மிரி காவல் நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக, 11 மூத்த மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர்.
புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர் ஸம்ரி யஹ்யா கூறுகையில், அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருப்பது கண்டறியப்பட்டால், பதவி இறக்கம் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.
“இந்தச் சம்பவத்தில் அலட்சியம் மற்றும் தவறான நடத்தைக் குறித்து ஜிப்ஸ் விசாரணை நடத்தி வருகிறது.
“இரண்டு உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையைத் தவிர, மூத்த மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் அடங்கிய மொத்தம் 11 பேர் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றவர்களாகவும் அலட்சியமாகவும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் (பதவியிறக்கம் அல்லது பணிநீக்கம்),” என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர் தனது காவல்துறை அறிக்கையில், ஆண்களின் கட்டறை பூட்டப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.
ஜனவரி 9 அதிகாலையில், தனது கட்டறையின் கதவைத் திறந்து, தன்னைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 8-ஆம் தேதி, கடமையில் இருந்த பிரேஸ் ஓமாங், 55, மற்றும் எட்மண்ட் ஜாலி, 44, என்ற இரண்டு அதிகாரிகள் மீது, குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31 (1) (a)-இன் கீழ், குற்றம் சாட்டப்பட்டது.
தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தைகளைத் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குவது குற்றம் என்று இந்தப் பிரிவு கூறுகிறது. இந்தச் சட்டம் RM50,000 வரை தண்டம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்கிறது.
அவர்கள் இருவரும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 166-இன் கீழ், மற்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர், இது ஓர் அரசு ஊழியர், சட்ட உத்தரவுக்கு இணங்காமல், எந்தவொரு நபருக்கும் காயம் விளைவிப்பதற்கு, தண்டனையாக ஒரு வருடச் சிறை அல்லது தண்டம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறுகிறது.