ஒன்பது வயதான தேசியப் பனி சறுக்கு நட்சத்திரம் ஸ்ரீ அபிராமியின், குளிர்கால ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றக் கனவை நனவாக்க, பொதுமக்கள் வழங்கிய நிதியால் அவரது தந்தை நெகிழ்ந்து போனார்.
நன்கொடை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த 55 வயதான சந்திரன் பாலகிருஷ்ணன், தற்போது லாட்வியா, ரிகாவில் பயிற்சி பெற்று வரும் தனது மகளின் பயிற்சிக்காக ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையின் கீழ் பெறப்பட்ட நன்கொடைகள் கவனமாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
“8000-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள், ஒரே வாரத்தில் RM600,000-க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளனர், பொதுமக்களின் பங்களிப்புக்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.
“2021 முதல் 2023 மார்ச் வரையில், எனது மகளின் பயிற்சிக்கான செலவை ஈடுகட்ட நான் எனது வீட்டை விற்க முற்பட்டதை அறிந்த மக்கள் இந்தப் பேருதவியைச் செய்ய முன்வந்தனர்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
அபிராமி தனது மூன்று வயதிலிருந்தே, பனிச் சறுக்கு விளையாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார், மேலும் 14 ஐ.எஸ்.ஐ.ஆசியா மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 50 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
சர்வதேச நீர் பனிச்சறுக்குப் போட்டிகளில் அதிகத் தங்கப் பதக்கங்களை வென்ற இளையத் தடகள வீரராக அவர் மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் ஆசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
“2028 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் 2030-ல் குளிர்கால ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே அவரது கனவு. வயது காரணமாக, இத்தாலியின் மிலனில் (2026) நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்க முடியாது.
“ஒலிம்பிக்கில் பங்கேற்க அவருக்கு 15 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இருப்பினும், போட்டியை 2027-க்கு ஒத்திவைத்தால், அவர் மிலனில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்துகொள்ள முடியும்.
சந்திரன், ஓர் இரஷ்ய விளையாட்டுக் கழகம் தனது மகளுக்குப் பயிற்சி அளிக்க முன்வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“2020-ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட் அபுடாபி பனிச்சறுக்குப் போட்டியில் அபிராமி நான்கு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றார்.
“போட்டியின் பின்னர், இரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டுக் கழகம் என்னைத் தொடர்பு கொண்டு, என் மகளின் பயிற்சி மற்றும் கல்வி செலவினங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தது.
“ஆனால், குளிர்கால ஒலிம்பிக்கில், மலேசியர்களுக்காக தங்கம் வெல்வதே எனது மகளின் கனவு என்பதால் நான் மறுத்துவிட்டேன்,” என்று அவர் கூறினார்.
அபிராமி தற்போது லாட்வியாவில், நான்கு சர்வதேசப் பயிற்சியாளர்களின் கீழ் பயிற்சியில் உள்ளார், அவருடன் அவரது தாய் இருக்கிறார்.
சந்திரனின் கூற்றுப்படி, பயிற்சிக்கான செலவு கிட்டத்தட்ட RM4 மில்லியனை எட்டக்கூடும், குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோய் காலத்தின் போது.
“ஏனென்றால், இப்போது அவர் தனியாகப் பயிற்சி பெற வேண்டும், கோவிட் -19 காரணமாக மற்ற விளையாட்டு வீரர்களுடன் எந்தவொரு வசதியையும் பகிர்ந்துகொள்ள முடியாது. எனவே, செலவு அதிகரித்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.
“இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சிடமிருந்து (கேபிஎஸ்) மானியம் பெறுவதற்கான எனது முயற்சிகள் தோல்வியடைந்தன. கேபிஎஸ் தனிப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு மானியங்களை வழங்கவில்லை என்று கூறிவிட்டது.
“எனவே, நான் எனது சொந்தமாக நிதி திரட்ட வேண்டியிருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.