7 நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள் மலேசிய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வலியுறுத்து

ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள், விரைவில் நாடாளுமன்றம் தடையின்றி அமர அனுமதிக்க வேண்டும் என்று பேரரசரையும் பிரதமரையும் வலியுறுத்தினர்.

இன்று ஒரு கூட்டு அறிக்கையில், அரசாங்கத்தின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், அவசரகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முக்கியக் கொள்கைகள் குறித்த முடிவெடுக்கும் செயல்முறைக்கு பங்களிப்பதற்கும் நாடாளுமன்ற அமர்வு முக்கியமானது என்று அவர்கள் கூறினர்.

அந்த அறிக்கையில் தாய்லாந்து, இந்தோனேசியா, திமோர்-லெஸ்தே, கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.

“மலேசியாவின் அவசரகால அதிகாரம் தற்போதுள்ள சர்வதேசத் தரங்களைத் தெளிவாகப் பூர்த்தி செய்யவில்லை, மேலும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மிகவும் குறைவாகவே இருக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது.

“மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் ஓர் அமைப்பாக செயல்படும் ஜனநாயகத்தில், நாடாளுமன்றத்திற்கு ஒரு முக்கிய நிலை உள்ளது. அதன் தற்போதைய இடைநீக்கம், முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்கள் ஈடுபாட்டை மறுத்துள்ளது.

“எந்தவொரு அரசாங்க முடிவும் மக்களின் வாழ்க்கையில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனில், அது கவலை அளிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் திறமையாக செயல்படவும், அதிகாரத் துஷ்பிரயோகம் ஏற்படும் அபாயத்தைக் கண்காணிக்கவும் இது மிக முக்கியமான நேரம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கடந்த மாதம், அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்றுநோய் பரவலை எதிர்த்துப் போராடும் அடிப்படையில், பிரதமர் முஹைதீன் யாசின் அவசரகாலப் பிரகடனத்தை அறிவித்தார். சரியான நேரம் என்று மாமன்னர் கருதும் வரை அது தொடரும், அதுவரை நாடாளுமன்ற, சட்டமன்ற அமர்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அவசரகால உத்தரவு ஆகஸ்ட் வரை நடைமுறையில் இருக்கும், மேலும் மூன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 19 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைக்கு இது உட்பட்டது.

நாட்டின் எல்லைகளில் ஆவணமற்ற வெளிநாட்டினரைக் கைது செய்ய, அவசரகாலங்களில் ஆயுதப்படைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்தும் அவர்கள் கவலைத் தெரிவித்தனர்.

“அவசரநிலைகள் மனித உரிமைகளை ஒடுக்குவதற்கோ அல்லது ஜனநாயக நிறுவனங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அது கட்டுப்படுத்த முற்படும் பொருத்தமானவற்றை எதிர்கொள்வதில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை இந்த அதிகாரிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம், தற்போது அது கோவிட் -19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மட்டும்.

“இத்தகைய அதிகாரங்கள், திறமையான நீதி மற்றும் சட்டமன்ற மேற்பார்வைக்கு உட்பட்டு தற்காலிகமாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட குழுக்களைக் குறிவைக்கக்கூடாது,” என்று அவர்கள் கூறினர்.