சாலை தடுப்பில், ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணைப் பெற்ற போலீஸ்காரர் ஒருவர், அவருக்குப் “பழகலாமா” என்றக் குறுஞ்செய்தியை அனுப்பிய சம்பவம், மற்றவர்களிடையே காவல்துறையிடம் என்னென்ன தகவல்கள் கொடுக்கலாம், தவிர்க்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.
மலேசியாகினி தொடர்பு கொண்ட வழக்கறிஞர் ஒருவர், சாலைத் தடுப்புகளில் நிறுத்தப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டுமென்று சட்டத்தில் கூறப்படவில்லை என்றார்.
வழக்கறிஞர் ராஜ் தனராஜா கூறுகையில், அந்தச் சூழ்நிலையில் நீங்கள் காவல்துறைக்குக் கொடுக்க வேண்டிய மூன்று தகவல்கள் மட்டுமே உள்ளன.
“காவல்துறைச் சட்டம் 1967-இன் கீழ், காவல்துறையினர் உங்களைத் தடுத்து நிறுத்தும்போது, அவர்களுக்கு ஓர் உரிமை மட்டுமே உள்ளது, அதாவது உங்களுக்குச் சட்டப்பூர்வ அனுமதி அல்லது வாகனம் ஓட்ட உரிமம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உரிமம் சாலை போக்குவரத்து சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
“காவல்துறையினர் அதைப் பார்த்தவுடன், அது போதுமானதாக இருக்க வேண்டும். காவல்துறையினர் கேட்கக்கூடிய மற்றொரு விஷயம் அடையாள அட்டை, ஏனெனில் தேசியப் பதிவுச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் அடையாள அட்டையை உடன் கொண்டு வர வேண்டும்,” என்று அவர் கூறினார்.
கோவிட் -19 தொற்றுக்காலத்தின் போது, கூடுதலாக காவல்துறையினர் கேட்கக்கூடிய மூன்றாவது விஷயம், அனுமதிக்கப்பட்ட 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அப்பால் செல்ல அனுமதி என்று அவர் கூறினார்.
“நடமாடும் சுதந்திரம், தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988-க்கு உட்பட்டது, அதன் ‘உரிமம்’ என்பது சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கடிதமாகும்.
“எனவே, தொலைபேசி எண்ணைக் கேட்க காவல்துறைக்கு உரிமை இருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், காவல்துறையினர் அதைக் கேட்கக்கூடிய சூழ்நிலைகளும் உள்ளன என்று ராஜ் விளக்கினார்.
“அவர்கள் விசாரிக்கும் போதுதான், நீங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். ஆனால் சாதாரண சூழ்நிலைகளில், காவல்துறையினரால் கோரக்கூடிய தகவல்கள் கட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளன,” என்று அவர் கூறினார்.
போலீசார் தொலைபேசி எண்ணைக் கேட்டால் என்ன செய்வது?
சாலைத் தடுப்புகளின் போது, காவல்துறையினர் தொலைபேசி எண்ணைக் கேட்டால், நாம் அமைதியாகி நிலைமையை நன்கு கையாள வேண்டும் என்றார் ராஜ்.
“காவல்துறையிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். அவர்கள் கடமையில் இருக்கிறார்கள், அவர்களின் சீருடைகளை நீங்கள் மதிக்க வேண்டும். சில நாடுகளில் உள்ளவர்களைப் போல நாம் போலீசாரை அவமதிக்கக்கூடாது.
“தொலைபேசி எண்ணைக் கேட்பதன் நோக்கத்தைக் கேளுங்கள். நீங்கள் உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தும்போது அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள்.
“உங்கள் உரிமம் அல்லது அடையாள அட்டையை மட்டுமே பார்க்க முடியும் என்றும், தொலைபேசி எண்ணுக்கும் ஆய்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மக்கள் தங்கள் உரிமைகளை அறிந்து, சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்று ராஜ் அறிவுறுத்தினார். அதிகாரிகள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் பார்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“பயன்படுத்தப்படும் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்க வேண்டும். உரிமைகளும் அதிகாரங்களும் துஷ்பிரயோகப்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரியாவிட்டால், அது மோசமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளர் நூர் அசியா மொஹமட் அவால் கூறுகையில், சாலைத் தடுப்புகளின் போது காவல்துறையினருக்கு ஓட்டுநர் உரிமம் அல்லது அடையாள அட்டையை பொதுமக்கள் காட்டத் தவறினால், தண்டம் விதிக்க காவல்துறைக்கு உரிமை உண்டு.
“ஆனால் அவர்களால் உங்களைப் தடுத்து வைக்க முடியாது. இது தடுத்து வைக்கப்படுவதை அனுமதிக்கும் குற்றம் அல்ல.
“உங்களை விடுவிக்க ஏதாவது கேட்டால், அதாவது உங்கள் உடலைப் பார்க்க அல்லது தொட்டுப்பார்க்க கேட்பது போன்று, காவல்துறை தண்டனைச் சட்டத்தின் கீழ் அது ஒரு குற்றமாகும்,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சம்பவம் நடந்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினரின் பெயரையும் சம்பவத்தின் இருப்பிடத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுமாறு நூர் அசியா அறிவுறுத்தினார்.