‘அனைத்து எம்.பி.க்களும் தடுப்பூசிகளைப் பெற்ற பிறகு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க எந்தக் காரணமும் இல்லை’

எம்.பி.க்கள் தடுப்பூசி பெற்ற பிறகு, மக்களவையை ஒத்திவைக்க எந்தக் காரணமும் இல்லை என்று கோத்த கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தைப் பெறுபவர்கள் குழுவில், அனைத்து எம்.பி.க்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து சான் இதனைக் கூறினார்.

“பிரதமரின், பிப்ரவரி 16-ம் தேதி அறிவிப்பை நான் வரவேற்கிறேன், அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் கோவிட் -19 தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள்.

“நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டம் முடிந்ததும், நாடாளுமன்றத்தைத் தடுக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ வேறு எந்தவொரு காரணமும் இல்லை. முதல் கட்டம் பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் வரை இயங்கும்.

“எனவே, கட்டம் 1 (முதல் கட்ட தடுப்பூசி) முடிந்த உடனேயே, மே மாதத்தில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும்.

புத்ராஜெயாவில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டக் கையேட்டை அறிமுகப்படுத்திய பின்னர், செய்தியாளர் சந்திப்பில் முஹைதீன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைச் சந்திக்க வேண்டியதன் அவசியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர், ஆரம்பக்கட்ட தடுப்பூசி பெறுநர்களில் அவர்கள் சேர்க்கப்படுகிறார்கள், மேலும் இது அவர்களின் கடமைகளை மிகவும் திறமையாகவும் பாதுகாப்பாகவும் நிறைவேற்ற உதவும் என்றார் சான்.