இல்லமிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு, குறிப்பாக இணைய வசதி இல்லாதவர்களுக்கு, கல்வி அமைச்சின் புதிய முயற்சியான ‘டிடேக் டிவி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி உதவும் என பிரதமர் முஹிடின் யாசின் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இல்லமிருந்து கற்றல் கற்பித்தலில் (பிடிபிஆர்), பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருப்பதாக முஹைதீன் கூறினார்.
“எனவே, இயங்கலையில் பிடிபிஆர், குறுகிய காலத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“இந்தக் கடினமான சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி அரசாங்கம் எப்போதும் உணர்ந்துள்ளது, அக்கறை கொண்டுள்ளது.
“கற்றல் வளங்களைப் பல்வகைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக, இணைய அணுகல் இல்லாத மாணவர்களுக்கு அல்லது இயங்கலை கற்றலுக்கு ஏற்ற சாதனங்களுக்கு உதவுவதற்காக, கல்வி அமைச்சு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்கியுள்ளது,” என்று அவர் இன்று அந்த அலைவரிசையின் தொடக்க விழாவில் கூறினார்.
கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுக்க, பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து பிடிபிஆர் செயல்படுத்தப்பட்டது.
இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்ற பல தரப்பினர் பல்வேறு காரணங்களுக்காக கற்றலில் சிரமத்தை வெளிப்படுத்தினர், அவற்றில் இணைய அணுகல் இல்லாமை அல்லது பற்றாக்குறை மற்றும் கணினி, திறன்பேசி போன்ற வசதிகள் இல்லாமையும் அடங்கும்.
பல சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் இணையத் தரவை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முதல், டிவி ஓக்கே ஆர்டிஎம். (TV Okey RTM), ஆஸ்ட்ரோ டுயூட்டர் டிவி (Tutor TV Astro) மற்றும் டிடேக்டிவி@என்டிவி 7 (DidikTV@NTV7) ஆகிய அலைவரிசைகளில் பெண்டிடிக்கான் டிவி (டிடேக்டிவி) ஒளிபரப்பப்படும்.
தினமும் காலை ஏழு மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒளிபரப்பப்படும் டிடிக்டிவி, குறிப்பாக இயங்கலை கற்றல் அணுகல் இல்லாத மாணவர்களுக்கு பிடிபிஆரைச் செயல்படுத்த உதவ முடியும் என்று முஹைதீன் நம்பிக்கை தெரிவித்தார்.
“இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்விக்கான அணுகலை அதிகரிப்பதில் கல்வி அமைச்சின் தொடர் முயற்சியாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.