ஒரு மேஜையில் 2-க்கும் மேற்பட்டவர்கள் அமர இன்று முதல் அனுமதி

இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி.) கீழ் உள்ள மாநிலங்களில், உணவருந்த ஒரு மேஜையில் இருவருக்கு மேல் அமர அனுமதிக்கப்படுகிறது.

மேலும், வாகனத்தின் கொள்ளளவு அடிப்படையில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர், இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி. ஆகியவற்றின் கீழ் உள்ள மாநிலங்களிலும் இதே விதிகள் பொருந்தும்.

நேற்றைய தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட எஸ்ஓபியில், பி.கே.பி.யின் கீழ் உள்ள மாநிலங்களில், மசூதிகள் மற்றும் மத அலுவலகங்களில் திருமண விழாக்களுக்குச் சாட்சிகள் மற்றும் நடத்துநர் (காடி) தவிர்த்து, அதிகபட்சம் 20 விருந்தினர்கள்  அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார்.

பி.கே.பி.பி.யின் கீழ் உள்ள மாநிலங்களைப் பொறுத்தவரை, திருமண விழாவில் விருந்தினர்களின் எண்ணிக்கை அந்த இடத்தின் பாதி கொள்ளலவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

முஸ்லிமல்லாதவர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான எஸ்.ஓ.பி.யைத் தேசிய ஒற்றுமை துறை விரைவில் அறிவிக்கும் என்றும் இஸ்மாயில் கூறினார்.