மியான்மரிலிருந்து அகதிகளாகவும் புகலிடம் கோரியும் இங்கு வந்தவர்கள், அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்படுவதிலிருந்து காப்பாற்ற, மலேசியர்கள் பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று எம்னெஸ்டி மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
#MigranJugaManusia என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் இயங்கலையில் ஆர்ப்பாட்டங்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை தொடங்கும்.
அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்ற வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக, பிரதமர் முஹைதீன், உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஆகியோரின் சமூக ஊடகக் கணக்குகளைக் குறிவைத்து, இந்தப் பிரச்சாரத்தைச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,200 மியான்மர் குடிமக்களைத் திரும்ப அழைத்து வர, மியான்மர் இராணுவம் மூன்று கடற்படைக் கப்பல்களை மலேசியாவுக்கு அனுப்ப முன்வந்ததாக ராய்ட்டர்ஸ் முன்பு செய்தி வெளியிட்டது.
இராணுவ இயக்கக் கப்பல் எனக் கூறப்படும் ஒரு கப்பல் உட்பட, மூன்று மியான்மர் கப்பல்கள் பேராக் லுமூட் துறைமுகத்தை வந்ததடைந்துள்ளதாக, ஃபிரி மலேசியா டூடே நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கப்பல்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, மியான்மருக்குத் திரும்பும் என்று நம்பப்படுகிறது.
பிப்ரவரி 23-ஆம் தேதி திருப்பி அனுப்பப்படும் திட்டத்தில், ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஆணையம் (யு.என்.எச்.சி.ஆர்) அல்லது ரோஹிங்கியா இன அட்டை கொண்டிருப்போர் அடங்கவில்லை என்று குடிநுழைவுத் துறை தலைவர் கைருல் டிசைமி டாவுட் தெரிவித்தார்.
இருப்பினும், மனித உரிமை குழுக்கள் அக்கூற்றின் உண்மைத்தன்மையைக் கேள்வி எழுப்பின.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள், அகதிகள் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் என்றத் தகுதியைப் பெறுகிறார்களா என்பதைத் தீர்மானிக்க, ஐ.நா. அகதிகள் ஏஜென்சிகள் 2019-ம் ஆண்டு முதல், தடுப்பு மையங்களை அணுக முடியவில்லை என்று லிபர்ட்டி வழக்குரைஞர்கள் குழு தெரிவித்தது.
முந்தையக் கைதிகளான சின், கச்சின் மற்றும் ரோஹிங்கியா இனத்தவர்கள், தற்போது, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நாட்டை ஆளுகின்ற மியான்மர் இராணுவத்தால் ஏற்பட்ட இன மோதலையும் துன்புறுத்தலையும் விட்டு வெளியேறியவர்கள்.
நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுபவர்களில் குறைந்தது 100 பேர் புகலிடம் கோருவோர் என்று எம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
“1,200 பேரில் சர்வதேசப் பாதுகாப்பு தேவைப்படுபவர்களும் உள்ளனர், அவர்கள் மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களின் உயிருக்கும் உரிமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்.
“புகலிடம் கோருவோர், அகதிகள் அல்லது உயிருக்கு ஆபத்து உள்ள எவரும், அவர் மியான்மரோ அல்லது எந்த நாட்டினரோ, துன்புறுத்தல்களை எதிர்கொள்ளக்கூடிய எந்த நாட்டிற்கும் அவர்களைத் திருப்பி அனுப்பும் கட்டாயம் இருக்கக்கூடாது,” என்று கூறிய அவர்கள், மலேசியாவைச் சர்வதேசச் சட்டத்தை மீற வேண்டாம் என்றும் நினைவுபடுத்தினர்.