கோவிட் -19 தடுப்பூசி : துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் ஓரங்கட்டப்பட்டனர்

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில், யார்யார் முதலில் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற வேண்டும் என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.

இருப்பினும், சில குழுவினர் மீது – தொற்று காலத்தில் கடுமையாக உழைத்தவர்கள் – தேவையான கவனம் செலுத்தப்படவில்லை என்று தெரிகிறது.

ஆரம்பகட்டத்தில், தடுப்பூசியை மருத்துவப் பணியாளர்கள், அமலாக்க குழுவினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முதலில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கோவிட் -19 தடுப்பூசியின் முதல் கட்டத்தில், ஆசிரியர்களையும்  உட்படுத்த புத்ராஜெயா பரிசீலிக்கத் தயாராக உள்ளது.

ஆனால், துப்புரவுத் தொழிலாளர்கள் மீது – தொற்றுநோயின் போது அதிகப் பாதிப்புகளை எதிர்கொண்ட – கவனம் செலுத்தப்படவில்லை என்பதனால், அரசியல்வாதிகளை விட, இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) நேற்று அரசாங்கத்தை வலியுறுத்தியது.

அரசியல்வாதிகள், அந்தப் பாதுகாப்பைப் பெற அதிக நேரம் காத்திருக்க முடியும் என எம்.எம்.ஏ. கூறுகிறது.

தொற்றுநோய் காலத்தில், மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ள போதிலும், அவர்கள் மற்ற முன்னணி ஊழியர்களைப் போல, அரசாங்கத்திடமிருந்து RM600 சிறப்பு மாதாந்திரக் கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, ​​அவர்கள் மீண்டும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதை – இந்த முறை தடுப்பூசி திட்டத்தில் – உறுதிப்படுத்த அழுத்தங்கள் எழுந்து வருகிறது.

 

மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்களையும், முன்னுரிமை அளிக்கப்படும் மற்ற முனைமுகத் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற எம்.எம்.ஏ. அழைப்பை அரசாங்க ஒப்பந்த ஊழியர் வலையமைப்பும் (ஜே.பி.கே.கே.) ஆதரிக்கிறது.

அதன் செயலாளரான எம் சிவரஞ்சனி, தடுப்பூசியுடன், பிற துறை சார்ந்த முனைமுகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கொடுப்பனவைத் துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென்றும் எம்.எம்.ஏ. அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றார்.

மலேசிய சோசலிசக் கட்சியின் தொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான அவர், முதற்கட்டத் தடுப்பூசி திட்டத்தில் ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தின் காரணமாக, பள்ளி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கும் அத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, ​​வயதானவர்களுக்குக் கோவிட் -19 தொற்றுவதற்கான ஆபத்து அதிகம் என்றும் அவர் கூறினார்.