மலேசியா 182,520 கூடுதல் அளவிலான ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை, நாளை (புதன்கிழமை) பெறும், இது இன்னும் தடுப்பூசிகள் கிடைக்காத மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
பெல்ஜியத்தில் வெளியிடப்பட்ட இந்தத் தடுப்பூசி, சிங்கப்பூரிலிருந்து, கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தைக் (கே.எல்.ஐ.ஏ.) காலையில் வந்தடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சருமான அவர் கூறினார்.
“வரவிருக்கும் தடுப்பூசிகள், இன்னும் கிடைக்கப்பெறாத மாநிலங்களுக்கு அனுப்பப்படும்,” என்று அவர், இன்று புத்ராஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்தத் தடுப்பூசி கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களுக்கு நாளை (பிப்ரவரி 24 புதன்கிழமை) விநியோகிக்கப்படும் என்றும், பஹாங், திரெங்கானு, கிளாந்தான், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 25) விநியோகிக்கப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.
கடந்த 21 பிப்ரவரி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, செப்பாங், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை (கே.எல்.ஐ.ஏ.) வந்தடைந்த 312,390 டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளின் முதல் தொகுதி, ஜொகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக விநியோகிக்கப்பட்டது.
பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோர், புதன்கிழமை கோவிட் -19 முதல்கட்டத் தடுப்பூசியைப் பெறுபவர்களில் ஒருவராக இருப்பார்கள் என்று கைரி முன்னர் கூறியிருந்தார்.
- பெர்னாமா