வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தின என்றக் குற்றத்திற்காக, மத்திய நீதிமன்றம் விதித்த RM500,000 தண்டத்தை மலேசியாகினி இன்று செலுத்தியது.
அதனை மலேசியாகினியின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள நீதி அரண்மனையில் செலுத்தினார்.
பொது நன்கொடைகளின் வழி, அப்பணம் சேகரிக்கப்பட்டது; சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகை, நிர்ணயிக்கப்பட்ட இலக்கு வரம்பைவிட கிட்டத்தட்ட RM250,000 அதிகமாகும்.
“மலேசியாகினிக்கு எண்ணற்ற ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கியதற்காக எங்கள் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம், அவர்களாலேயே இந்தத் தண்டத்தை மூன்று நாட்களுக்குள் செலுத்த முடிந்தது.
“இது ஒரு பெரிய தொகை, எங்களுக்குக் கிடைத்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,” என்று கினிடிவியில் பிரேமேஷ் தெரிவித்தார்.
“ஐந்து மணி நேரத்தில் எங்களால் RM500,000-ஐ சேகரிக்க முடிந்தது, இப்போது அந்தத் தொகை கிட்டத்தட்ட RM750,000 வரையில் அதிகரித்த போது, வாசகர்களின் ஆதரவால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம்.
ஐந்து மணி நேரத்திற்குள் RM500,000 தொகை சேகரித்தவுடன், நன்கொடை திரட்டலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இருப்பினும், 6,527 நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் RM749,371 நன்கொடைகள் மலேசியாகினிக்குத் தொடர்ந்து வழங்கப்பட்டது.
அவர்களில் பெரும்பாலோர், 85 விழுக்காட்டினர், RM20 முதல் RM200 வரை நன்கொடை வழங்கியவர்கள்.
இந்த விஷயத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரேமேஷ், வாசகர்களின் இந்த ஆதரவு, மலேசியாகினி தொடர்ந்து செய்திகளை நியாயமாகவும், துல்லியமாகவும், சீரானதாகவும் வெளியிட ஊக்கமளிப்பதாகக் கூறினார்.
“எங்களிடம் சுமார் RM250,000 நன்கொடை மீதமுள்ளது. அப்பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஆராய்வோம்,” என்றார் அவர்.