கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 3,545 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் (1,392) நெகிரி செம்பிலான் பதிவு செய்துள்ளது என்றார் அவர்.
“நெகிரி செம்பிலானில் பாதிப்புகளின் அதிகரிப்பு சுங்கை காடுட் தொழில்துறை திரளையிலிருந்து கண்டறியப்பட்டது.
“சிரம்பான், கிமீ 11, சுங்கை காடுட் தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு மர தயாரிப்பு உற்பத்தி தொழிற்சாலை பணியிடத்தில் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட திரையிடலின் விளைவாக இந்தத் திரளை 22 பிப்ரவரி 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
“இன்று, இந்தத் திரளையில் மொத்தம் 1,338 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 24, 2021 வரையில், இந்தத் திரளையில் மொத்த 1,432 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
“இவற்றில் 318 பேர் மலேசியர்கள், 1,114 பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று 3,331 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 88 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இதற்கிடையில், இன்று 12 மரணங்கள் சம்பவித்துள்ளன. அவற்றுள் 11 பேர் மலேசியர்கள். ஆக, நாட்டில் இதுவரை 1,088 நோயாளிகள் இத்தொற்றினால் இறந்துள்ளனர்.
பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.
மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-
நெகிரி செம்பிலான் (1,392), சிலாங்கூர் (581), கோலாலம்பூர் (381), சரவாக் (353), ஜொகூர் (318), பேராக் (188), சபா (105), பினாங்கு (95), கிளந்தான் (53), மலாக்கா (26), திரெங்கானு (22), கெடா (17), பஹாங் (8), லாபுவான் (5), புத்ராஜெயா (1).
இன்று 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 7 பணியிடம் சார்ந்தவை.