இன்று 1,924 புதிய நோய்த்தொற்றுகள், 12 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 1,924 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது கடந்த ஜனவரி 4-க்குப் (1,741) பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

புதிய வழக்குகளில் ஆறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை, மீதமுள்ளவை உள்நாட்டில் பரவியவை. உள்ளூர் பாதிப்புகளில் பெரும்பாலானவை (80.4 விழுக்காடு) மலேசியர்களை உள்ளடக்கியது.

“இது மிகவும் சாதகமான வளர்ச்சியாகும், தற்போதைய கோவிட் -19 நிலைமை மேம்படும் என்று நம்பப்படுகிறது,” என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் கூறினார்.

கோவிட் -19 தொற்றினால் இன்று 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதனால் தேசிய இறப்பு எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்தது.

இறப்புகளில் ஒன்பது சிலாங்கூரிலும், சரவாக்கில் இரண்டும், பினாங்கில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளன. இறந்தவர்கள் அனைவரும் மலேசியர்கள்.

இன்று 3,752 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 91 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (666), ஜொகூர் (257), சரவாக் (219), கோலாலம்பூர் (218), பினாங்கு (162), பேராக் (120), சபா (93), நெகிரி செம்பிலான் (62), கிளாந்தான் (44), கெடா (29), மலாக்கா (22), பஹாங் (19), திரெங்கானு (6), லாபுவான் (4), புத்ராஜெயா (2), பெர்லிஸ் (1).

இன்று 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 5 பணியிடம் சார்ந்தவை.