ஸ்டீவன் கான், சார்லஸ் சந்தியாகோ புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

கடந்த வெள்ளிக்கிழமை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மலேசியாகினி குற்றவாளி என்ற ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான விசாரணைக்கு உதவ, மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இருவரும் அடுத்த திங்கட்கிழமை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தனது சாட்சியத்தைப் பதிவு செய்வதற்காக, மார்ச் 1-ஆம் தேதி, காலை 10.30-க்கு புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டதாக தனது கீச்சகத்தின் வழியாக சார்லஸ் தெரிவித்தார்.

“இது மலேசியாகினிக்கு எதிரான ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, நான் கூறிய கருத்து தொடர்பாக, கெடாவில் எனக்கு எதிராக செய்யப்பட்ட போலிஸ் புகாருடன் தொடர்புடையது.

“நான் காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைப்பேன் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

அதே நாளில், பிற்பகல் 2 மணிக்கு, மலேசியாகினி துணைத் தொகுப்பாளர் ஒருவருடன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதைக் கான் உறுதிப்படுத்தினார்.

இந்த வாரத் தொடக்கத்தில், கோல மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர் (ஒ.சி.பி.டி.), அட்ஸ்லி அபு ஷா, கெடா, குருனில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரால் சார்லஸ் மற்றும் கானுக்கு எதிராக தனித்தனியாக இரண்டு போலிஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

“தேசத் துரோகச் சட்டம், பிரிவு 4 (1) மற்றும் பல்லூடகத் தகவல் தொடர்புச் சட்டத்தின், பிரிவு 233 கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

“புகார்தாரர் இரண்டு தனித்தனி புகார்களைச் செய்துள்ளார், ஒன்று ஸ்டீவனுக்கு எதிராக, மற்றொன்று எம்.பி. சார்லஸுக்கு எதிராக.

“நாங்கள் இன்னும் அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை, ஆனால் விசாரணையை எளிதாக்க, உடனடியாக அவர்களைத் தொடர்புகொள்வோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, வாசகர்களின் கருத்துகள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, மலேசியாகினிக்கு ஃபெடரல் நீதிமன்றம் RM500,000 தண்டம் விதித்தது.

நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை எதிர்த்து, பல விமர்சன அறிக்கைகளை வெளியிட்டவர்களில் கான்’னும் சார்லஸும் அடங்குவர்.