முஹைதீன் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இனி எந்தக் காரணமும் இல்லை – பெஜுவாங்

அவசரக் காலங்களில் நாடாளுமன்றம் அமர முடியும் என்ற மாட்சிமை தங்கியப் பேரரசரின் அறிக்கையை அடுத்து, பிரதமர் முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க இனி எந்தக் காரணமும் இல்லை என்று பெஜுவாங் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்க, அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முஹைதீனிடம் ஆலோசனை பெறத் தேவையில்லை என்றும் பெர்சத்து தெரிவித்துள்ளது.

“காரணம், அவசரகாலத்தின் போது அதிகாரம் பேரரசரின் கையில் உள்ளது,” என்று இன்று ஓர் ஊடக அறிக்கையில் அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

அந்தக் கூட்டு அறிக்கையை லங்காவி எம்.பி. டாக்டர் மகாதீர் மொஹமட், முக்ரிஸ் மகாதிர் (ஜெர்லுன்), அமிருட்டின் ஹம்சா (குபாங் பாசு), ஷாருட்டின் முகமட் சல்லே (ஸ்ரீ காடிங்) மற்றும் மக்களவை உறுப்பினர் மர்சுகி யஹ்யா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இது தவிர, கடந்த ஆண்டு மே 18 அன்று நடைபெற்ற ஒரு நாள் கூட்டமாக இல்லாமல், இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த வேண்டும் என்றும் பெஜுவாங் கருதுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

“இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் பிரதமரின் நியாயத்தன்மை கேள்விக்குட்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், பொருளாதாரப் பிரச்சினைகள், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் குழப்பமான நிர்வாகம் ஆகியவை மக்களிடையே கஷ்டத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.