தமிழ்மொழி இந்துக்களுக்குச் சொந்தமானதா? – மலேசிய இந்துச் சங்கத்தின் பிரித்தாளும் அரசியல்

கடந்த ஜனவரி 24, 2021, கல்வித் துணையமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பை விளக்கி நாளிதழில் விடப்பட்டிருக்கும் அறிக்கை, மலேசிய இந்துச் சங்கத் தலைவர் மோகன் சாணின் அறியாமையை வெளிப்படுத்துவதாக மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கருதுவதாக அதன் தலைவர் தமிழரண் தெரிவித்தார்.

அவ்வறிக்கையில், இந்துக்களுக்குச் சொந்தமான தமிழ்மொழியைக் கையகப்படுத்திக் கொள்ள முயன்று, தமிழ் பேசும் பிற இனத்தவரின் தூண்டுதலில் இந்துக்களே தம் சொந்த மொழியை வைத்துத் தங்கள் சமயத்தை மெதுமெதுவாக அழித்துக்கொள்வதை இந்துச் சங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று மோகன் சாண் குறிப்பிட்டிருக்கிறார்.

“தமிழ்மொழி என்பது மரபுவழியில் அதனைத் தம்முடைய தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களின் தாய்மொழியாகும். அம்மொழியை இந்து மதத்தைத் தங்களின் மதமாகக் கொண்டவர்களுக்குத்தான் சொந்தம் என்பது வேடிக்கை. ஒரு மதம் எப்படி ஒரு மொழியை இப்படித் தன்னகப்படுத்த முடியும்?” என்று தமிழரண் கேள்வி எழுப்பினார்.

“இந்து மதத்தைத் தங்களின் மதமாகக் கொண்டவர்கள் மட்டுமே தமிழர் என்கிறாரா மோகன் சாண்?

“இந்தியக் கூட்டுக்குள் இந்துக்களாக இருக்கும் தெலுங்கர், மலையாளி, கன்னடர், மராட்டியர், சிந்தியர்கள் போன்றவர்களையும் தமிழர் என்கிறாரா?

“இதை அந்த மக்கள் ஏற்பார்களா? ஏற்றுக்கொண்டுத் தமது தாய்மொழியை விட்டுவிடுவார்களா?” என்று கேட்ட தமிழரண், அவர்கள் எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.

தமிழ் பேசும் பிற இனத்தவர் என்று யாரை தன் அறிக்கையில் குறிப்பிடுகிறது மலேசிய இந்துச் சங்கம் என்றும் அவர் கேட்டார்.

“மலேசியாவில் தமிழ் பேசும் பிற இனத்தவர்கள் என்றால் இந்தியர் எனும் கூட்டுக்குள் இருக்கும் தெலுங்கு, மலையாளி, கன்னடர், மராட்டியர், சிந்தியர்களை குறிப்பிடுகிறாரா என்பதனையும் விளக்க வேண்டும்,” என்றார் அவர்.

‘இந்துக்களுக்குச் சொந்தமானது தமிழ்மொழி’ என்றால், இந்துச் சங்கத்தில் இணைந்திருக்கும் 2356 கோவில்களிலும் தமிழ்மொழியை வழிபாட்டு மொழியாக கொண்டுவருவதற்கு இந்துச் சங்கத்தால் முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“குறைந்தபட்சம், பத்துமலை திருமுருகன் திருக்கோயிலில் நடப்பது போல, நாட்டிலுள்ள மற்றக் கோயில்களிலும், ஆறுகாலப் பூசைகளில், ஐந்தையாவது  தமிழ்மொழியில் நடத்த வேண்டுமென இந்து சங்கத்தால் கூறமுடியுமா? தமிழ்தான் இந்துக்களின் மொழியென்றால்,  பூசைகளைத் தமிழில் நடத்துவதில் தடையேதும் இருக்க வாய்ப்பில்லையே,” என்று அவர் மேலும் சொன்னார்.

இந்திய நாட்டின் மதவாத அமைப்புகள் போலவும், அரசியல்வாதிகள் போலவும், தமிழர்களை மத அளவில் பிளவுபடுத்தும் சூழ்ச்சிகளைச் செய்வதை இந்துச் சங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மலேசியத் தமிழர் தேசியப் பேரவை ஓர் அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், எந்த மதத்தைத் தழுவி இருந்தாலும் அவர்கள் தமிழர்களே என்றார் தமிழரண்.

“மதம் மாறக்கூடியது, ஒருவர் ஒரு மதத்திலிருந்து நினைத்த நேரத்தில் மற்ற மதங்களுக்கு மாறலாம். ஆனால், இனம் மாறக்கூடியது அல்ல. இதனை மோகன் சாண் புரிந்துகொண்டு, தமிழர் மற்றும் தமிழ்மொழி சார்ந்த பற்றியங்களில் தலையிடுவதையும், பொருந்தாக் கருத்துகளைச் சொல்வதையும் நிறுத்த வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.