15-வது பொதுத் தேர்தலை (ஜிஇ15) எதிர்கொள்வதில், பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரலாமா என்பது குறித்து தேசிய முன்னணி (பி.என்.) தலைவர்களுடன் ம.இ.கா. விவாதிக்கும்.
அதன் துணைத் தலைவர் எம் சரவணன், தற்போது, இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.
“நாங்கள் முன்னேற்றங்களைக் கவனிப்போம். இதுவரை, நாங்கள் இதை பிஎன் மட்டத்தில் விவாதிக்கவில்லை, ஆனால் பிஎன்-னின் ஓர் உறுப்பு கட்சியாக விரைவில் நாங்கள் அதனைச் செய்வோம்.
“இதற்கு முன்பே, நாங்கள் பி.என்.-இன் ஓர் பகுதியாக இருப்பதால் தேசியக் கூட்டணியை ஆதரித்து வருகிறோம்,’ என்று அவர், நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பஹாங், ஜண்டா பாய்க்கில், அம்னோ தலைவர்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்குப் பின்னர், கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி, ஜி.இ.15-இல் பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று அம்னோ தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் ஊடக அறிக்கைகள் குறித்து, கருத்து தெரிவிக்க சரவணனிடம் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்.
– பெர்னாமா