என்.ஜி.ஓ. : புகலிடம் கோரி வந்த குழந்தைகளும் திருப்பி அனுப்பப்பட்டனர்

புகலிடக் கோரிக்கையாளர்களில் குறைந்தது இருவராவது, தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆசியப் பசிபிக் அகதிகள் உரிமைகள் வலையமைப்பு (ஏபிபிஆர்என்) கூறியது.

இந்த வாரத் தொடக்கத்தில், மியான்மர் கடற்படைக் கப்பலால் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மொத்தம் 1,086 மியான்மர் நாட்டினரில், இந்த இரண்டு குழந்தைகளும் அடங்குவர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“மலேசிய அரசாங்கம் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியது மட்டுமல்லாமல், உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது,” என்று ஏபிஆர்ஆர்என் ஒரு கீச்சக அறிக்கையில் கூறியுள்ளது.

ஒரு கூட்டு அறிக்கையில், ஏ.பி.பி.ஆர்.என்., மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம் (Asian Forum for Human Rights and Development) மற்றும் மனித உரிமைகளுக்கான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சர்வதேசத் தடுப்பு கூட்டணி (Asean Parliamentarians for Human Rights and the International Detention Coalition) ஆகியவை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரை (யு.என்.எச்.சி.ஆர்.) முழுமையாகவும் உடனடியாகவும் மலேசியக் குடிநுழைவு தடுப்பு மையங்களை அணுக அனுமதிக்க வேண்டுமென மலேசிய அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளன.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தற்காலிகத் தடை உத்தரவை மீறி, பிப்ரவரி 23-ம் தேதி, 1,086 பேரை மியான்மருக்குத் திருப்பி அனுப்பியதையும் விசாரிக்குமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 1,200 மியான்மர் நாட்டினரைத், தற்போது அரசியல் கொந்தளிப்பில் உள்ள அவர்கள் நாட்டிற்கே, மலேசியா திருப்பி அனுப்ப உள்ளதாகக் கூறப்பட்டது.

இம்மாதத் தொடக்கத்தில், ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடம் இருந்து, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இது நடந்தது.

குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டாவுட், அவர்களில் யாரையும் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை, இந்த நடவடிக்கைக்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், திருப்பி அனுப்பப்படாத மீதமுள்ள 114 பேர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை, மலேசிய அரசு இதுவரை வழங்கவில்லை என்று ஏபிபிஆர்என் தெரிவித்துள்ளது.

“நாடு கடத்தப்பட்ட 1,086 பேர்களில், அரசியல் புகலிடம் கோரியவர்களும் ரோஹிங்கியா அகதிகளும் இல்லை என்று குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“இருப்பினும், இந்தக் குழுவில் அகதிகள் மற்றும் குழந்தைகள் உட்பட அரசியல் புகலிடம் கோருவோரும் இருக்க அதிக வாய்ப்புண்டு,” என்று ஏபிஆர்ஆர்என் கூறினார்.

பிப்ரவரி 23 மதியம், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறிய குடிநுழைவுத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்குரைஞர் அஹ்மத் ஹனீர் ஹம்பாலி, அன்று காலையிலேயே மியான்மர் இராணுவத்திடம் அவர்களைக் ஒப்படைத்து விட்டதாகச் சொன்னார்.

எம்னஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) ஆகியவற்றின் நீதி மறுஆய்வு விண்ணப்பத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பும் திட்டத்தை அதிகாரிகள் அறிவித்த உடனேயே, பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தன.

அந்நாட்டில் நடந்துவரும் தற்போதைய மோதல்கள், அகதிகளின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால், இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.