1எம்.டி.பி. ஊழல் : RM2.83 பில்லியனை அரசாங்கத்திற்குச் செலுத்த எம்பேங்க் ஒப்புக்கொண்டது

எம்பேங்கில் நிலுவையில் உள்ள அனைத்து 1எம்.டி.பி. உரிமைகோரல்களையும் தீர்க்கும் வகையில், RM2.83 பில்லியனைச் செலுத்த எ.எம்.எம்.பி. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஒப்புக்கொண்டது.

இந்த விஷயத்தை நிதி அமைச்சு நேற்று பிற்பகல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1எம்.டி.பி. தொடர்பான சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அனைத்து தரப்பினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

“இது ஜூலை 2020-இல், கோல்ட்மேன் சாச்ஸுடன் RM15.8 பில்லியன் (அமெரிக்க டாலர் $ 3.9 பில்லியன்) தீர்வை எட்டுவதற்கான அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலானது.

“இந்தத் தீர்வு 1எம்.டி.பி. ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் தனிநபர்களையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்காது, குற்றவியல் நீதி அமைப்பு அவர்கள் மீது தொடர்ந்து வழக்குத் தொடரும்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்வு மலேசியர்களுக்கு நன்மை பயக்கும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் விவரித்தார்.

“நீதிமன்ற அமைப்பின் மூலம் இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண நிறைய நேரம், பணம் மற்றும் ஆற்றல் தேவைப்படும்.

“இந்தத் தீர்வின் மூலம், நீண்ட நீதிமன்ற மோதலுடன் ஒப்பிடும்போது, ​​கொடுப்பனவுகள் விரைவுபடுத்தப்படும், மேலும் இதனை 1எம்.டி.பி. கடன்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், உலகளாவிய தீர்வு விதிகளின் ஒரு பகுதியாக, அமீன்வெஸ்ட்மென்ட் பேங்க் பெர்ஹாட்டைச் சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பத்திரங்கள் ஆணையம் (எஸ்.சி.) அறிவுறுத்தியுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, எம்பேங்க் குழுமத்திற்குப் பேங்க் நெகாரா மலேசியா (பிஎன்எம்) விதித்த RM53.7 மில்லியன் தண்டம் அந்த மொத்தத் தீர்வில் அடங்கவில்லை.

தொழிலதிபர் லோ தெக் ஜோ, முன்னாள் 1எம்.டி.பி. சட்ட அதிகாரி ஜாஸ்மின் லூ மற்றும் 1எம்.டி.பி ஊழலில் தொடர்புடைய பிற தரப்பினர் மீதான மலேசியாவின் கோரிக்கைகளை உலகளாவியத் தீர்வுகள் பாதிக்காது என்றும் அது வலியுறுத்தியது.

எஸ்.சி., சட்டத்துறை தலைவர் அலுவலகம், பிஎன்எம், காவல்துறை, தேசிய நிதிக் குற்றத் தடுப்பு மையம் (என்ஏஎஃப்சிசி), மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மற்றும் தேசிய ஆளுகை, நேர்மை & ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஆகியவை இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண முயற்சித்து வருகின்றன.