பி.கே.ஆர். எம்.பி.யும், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சருமான எட்மண்ட் சந்தாரா குமார், 2020 டிசம்பரிலிருந்து தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து தொடர்ந்து, பி.கே.ஆர். எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
`சரவாக் ரிப்போர்ட்` வலைத்தளத்தின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சந்தாரா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் கூறினார்.
குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதோடு, பெறப்பட்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருப்பித் தர வேண்டுமென்று, சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தாராவைப் பிரபாகரன் வலியுறுத்தினார்.
“தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு (பிஎன்) மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை? இன்று சந்தாரா எங்கே? பிஎன் அரசியல் கொந்தளிப்பைத் தாங்க முடியாததால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“நீங்கள் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரைச் சந்திக்க விரும்பும் சிகாமாட் வாக்காளரா? அல்லது கூட்டரசி பிரதேசத் துணையமைச்சரைச் சந்திக்க விரும்பும் அரசு ஊழியரா?
“2020 கிறிஸ்மஸ் முதல், யாராவது சந்தாராவைச் சந்தித்திருக்கிறீர்களா? `சரவாக் ரிப்போர்ட்` அவர் இப்போது நியூசிலாந்தில் இருப்பதாக கூறுகிறது, இது உண்மையா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.
பதிவுக்காக, சந்தாரா பி.கே.ஆரை விட்டு பெர்சத்துவில் தன்னை இணைத்துகொண்டார்.
கடந்த மாதம் அங்கு வெள்ளம் ஏற்பட்டபோது, சந்தாரா சிகாமாட்டில் இல்லை என்றும் பிரபாகரன் குற்றஞ்சாட்டினார்.
அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசிப்பதாகவும், அவரது குழந்தைகள் அங்கு படிப்பதாகவும் சரவாக் ரிப்போர்ட் கூறுகிறது.
தொகுதி மக்கள் சிக்கலில் இருக்கும்போது, நாடாளுமன்றத் தொகுதியை விட்டு வெளியேறும் எம்.பி.க்கள் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்றார் பிரபாகரன்.
சந்தாரா மற்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா ஆகியோரின் கருத்தறிய, மலேசியாகினி அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிக்கிறது.
இருப்பினும், குடும்ப விஷயங்கள் காரணமாக சந்தாரா நியூசிலாந்து சென்றார் எனத் தெரிகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி, கூட்டரசுப் பிரதேசத் தினத்தை முன்னிட்டு அவர் மலேசியா திரும்பியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அதன் பின்னர் மீண்டும் அவர் அங்கு சென்றுள்ளார்.
மார்ச் 2020 முதல, கடுமையான பயண வழிகாட்டுதல்களை வகுக்கும் நாடுகளில் நியூசிலாந்தும் உள்ளது.
கோவிட் -19 பரவலை அந்நாடு வெற்றிகரமாகத் தடுத்துள்ளது, இதுவரை மொத்தம் 2,372 பாதிப்புகளும் 26 இறப்புகளும் மட்டுமே அங்குப் பதிவாகியுள்ளன.
நேற்று, அந்நாடு ஒரு புதிய நேர்வைப் பதிவு செய்தது.
சந்தாரா தற்போது நியு சிலாந்தில் தங்கியிருக்கும் செய்தி உண்மையாய் இருக்கலாம். ஆனால், டிசம்பர் மாதத்திலிருந்தே அங்கே தங்கியிருந்தாரா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஆட்சிக் கவிழ்ப்பு பிப்ரவரி 2020ன் மத்தியில் இடம் பெற்றது. இதன் தொடர்பில் ஷேரத்தன் விடுதி சந்திப்பு, பேரரசர் சந்திப்பு போன்ற பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். இதை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால், இன்னும் ஊடகங்களில் உலா வரும் இதன் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், காணொளிகளை மீட்டெடுத்துப் பார்க்கலாம்.
இதன் பிறகு வேண்டுமானால் இரண்டு வார இடைவெளியில் அவர் நியு சிலாந்துக்குக் குடும்பமாகச் சென்றிருக்கலாம். அதுவும் நிரந்தரமாகத் தங்குவதற்குச் சென்றாரா என்ற இன்னொரு கேள்வியையும் ஆராய வேண்டும். காரணம் மார்ச் 15 (???) வரை விமானப் பயணங்கள் உலகளாவிய நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தன. அதற்குப் பிறகுதான் கோவிட் பெருந்தொற்று நிமித்தம் அனைத்துலகப் பயணங்கள் முடக்கப் பட்டன.
ஒரு வேளை இதன் நிமித்தம் நிர்பந்தத்தின் பேரில் அவர் அங்கேயே குடும்பமாகத் தங்கியிருக்கலாம்.
இது என் அநுமானம் மட்டுமே. நாட்டில் நடைபெற்ற மலாய் அரசியல் துரோகத்தில் இணைந்து கொண்ட ஒரே ஒரு இந்தியர் என்பதால் இவருடைய நடவடிக்கைகளை நானும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இதனிமித்தம் ஒரு வேளை இவருடைய அரசியல் பயணம் நிரந்தரமாகக்கூட சூனியமாகிப் போகலாம்.
மலாய் தலைவர்கள் அரங்கேற்றிய இந்த ஜனநாயகக் கொலையில் இவர் மட்டும் ஒரேயொரு வேற்றினத்தவராக எப்படி இணைந்து கொண்டார் என்ற கேள்வியும் என்னை நெருடுகிறது. ஒரு பக்கம் அன்வார் மீது நம்பிக்கையிழந்த அஸ்மின் அணியினர் வேலி தாண்டிய நிலையில், மலாய் அல்லாதவர் நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பைக் கைப்பற்றியதன் நிமித்தம் மலாய் சமூகத்தில் ஏற்பட்ட பெரும் அதிருப்தியும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. இந்த இரண்டாவது காரணியின் வெளிப்பாட்டை, அச்சம்பவத்துக்குப் பிறகு நிகழ்ந்த பதவி பகிர்வுகளில் காணலாம்.
அடுத்த பொதுத் தேர்தலில் அவர் களமிறங்க விரும்பினாலும் எந்த அரசியல் கட்சியில் அவர் போட்டியிடுவார் என்ற மில்லியன் டாலர் கேள்வியையும் நாம் சிந்திக்க வேண்டும். பிகேஆர் கட்சியோடு களமிறங்கும் எக்கட்சியும் அவரை ஏற்றுக் கொளளாத நிலையில் அநேகமாக அவர் தேசிய கூட்டமைப்பில் மட்டுமே இணையக்கூடிய சாத்தியமிருக்கிறது. இதில் அங்கம் வகிக்கும் பாஸ், அம்னோ, பெர்சத்து ஆகிய மும்மூர்த்திகள் மலாய்-இஸ்லாம் பேரினவாதத்தை ஆதரிக்கும் நிலையில், அக்கூட்டமைப்பின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கும் மஇகா, கெராக்கான் ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்றை மட்டுமே அவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், மஇகா.வின் கோட்டையாக இருந்த சிகாமட் தொகுதியை அது இவருக்கு விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வியையும் யோசிக்க வேண்டும். ஒரு வேளை அதன் முந்திய உறுப்பினர் டத்தோ எஸ்.சுப்ரமணியமே அங்கே போட்டியிட விரும்பலாம்.
அப்படியே சந்தாரா கெராக்கானில் இணைந்து அத்தொகுதியில் போட்டியிட முனைந்தாலும் மஇகா தன் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும். காலா காலமாக தன் வசமிருந்த அக்கோட்டையை பங்காளிக்கு விட்டுக் கொடுத்தால் அது, மஇகா.வுக்குத் தன்மானப் பிரச்சினையாகும். மேலும், தற்போதைய கூட்டணியில் மஇகா விசுவாசமாக நிலைத்திருந்த வேளையில், இந்த கெராக்கான் கடந்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தே.மு.விலிருந்து வெளியேறி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது.
இறுதியாக, சந்தாரா பதவி விலக வேண்டும் என்று பிரபாகரன் அரைகூவல் விடுத்தாலும், அவர் இயல்பாகவே, சொந்தப் பணத்தில் சூனியம் வைத்துக் கொண்டதால், சூரியனைக் கண்ட பணி போல் அரசியலில் இருந்து காணாமற் போய்விடுவார் என்பதே அவருக்கு எழுதி வைக்கப்பட விதி.