மலேசியத் தேசிய வங்கியின் (பிஎன்எம்) ஆளுநராக ஸெட்டி இருந்தபோது, அவரது கணவர் மற்றும் மகன் ஸெட்டி அக்தர் அஜீஸுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்திற்கும், தொழிலதிபர் லோ தெக் ஜோ அல்லது ஜோ லோவிற்கும் இடையில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்ததை சிங்கப்பூர் போலீசார் ஏற்கனவே தேசிய வங்கிக்கு (பிஎன்எம்) தகவல் கொடுத்திருந்தனர்.
2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், சிங்கப்பூர் போலிஸ் வணிக விவகாரத் துறையின் (சிஏடி) ஆவணங்கள் மற்றும் தகவல்தொடர்புகள், அயன் ராப்சோடி லிமிடெட் (Iron Rhapsody Ltd) சம்பந்தப்பட்ட பரிவர்த்தனை தகவல்களைப் பிஎன்எம் உடன் பகிர்ந்து கொண்டதாக ‘தி எட்ஜ்’ அறிக்கை கூறுகிறது.
ஸெட்டி ஏப்ரல் 2016-இல் பி.என்.எம்.-லிருந்து ஓய்வு பெற்றார்.
அந்த அறிக்கையின்படி, சிஏடி 1எம்.டி.பி. தொடர்பான பரிவர்த்தனைகளை விசாரிக்கத் தொடங்கியதும், 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பரிவர்த்தனைகள் குறித்து, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பிஎன்எம்-க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவிற்கு சிஏடி பகிர்ந்த ஆவணங்களில், யுபிஎஸ் சிங்கப்பூர் வங்கியில் இருக்கும் அயர்ன் ராப்சோடியின் கணக்கிற்கு 16.22 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஜோ லோவுடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் அல்லது கணக்கிலிருந்து பெற்றுள்ளதைக் காட்டியது என ‘தி எட்ஜ்’ கூறுகிறது.
ஜூன் 18, 2008-ல், ஜொகூர் கஸானா நேஷனலுடனான RM3 பில்லியன் நில பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஜோ லோவின் புதம்பா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (Butamba Investments Ltd) அமெரிக்க டாலர் 7.42 மில்லியனையும் இது உள்ளடக்கியது.
ஜொ லோ நிலத்தின் உரிமையில் தனது பங்குகளை விற்ற பிறகு பரிவர்த்தனையிலிருந்து RM400 மில்லியன் இலாபம் ஈட்டியதாகக் கூறப்படுகிறது.
அயர்ன் ராப்சோடிக்கு மற்றொரு பரிவர்த்தனை, அமெரிக்காவின் சட்ட நிறுவனமான ஷீர்மன் & ஸ்டெர்லிங்கிலிருந்து மே 21, 2009 அன்று AS$732,000 அமெரிக்க டாலராக இருந்தது.
டிசம்பர் 17, 2009-ல், அச்சட்ட நிறுவனம் 6.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை அயர்ன் ராப்சோடிக்கு மாற்றியது.
‘குட் ஸ்டார்’ கட்டத்தின் போது, முறைகேடாக 1எம்டிபி நிதிகளை மோசடி செய்ய ஜோ லோ ஷீர்மன் & ஸ்டெர்லிங்-ஐ பயன்படுத்தினார்.
சிஏடி சிங்கப்பூர், ஜொ லோவிடமிருந்து அயர்ன் ராப்சோடிக்கு மேலும் இரண்டு பரிவர்த்தனைகள் நடந்ததை அறிவித்தது, இது ஜூன் 1, 2009 அன்று 567,000 அமெரிக்க டாலர்களும் 18 டிசம்பர் 2009 அன்று 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது ஆகும்.
இதற்கிடையில், ஸெட்டியின் கணவர் தவ்ஃபிக் அய்மான், 2007-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, அபுதாபி மலேசியா குவைத் முதலீட்டுக் கழகத்தில் (ADKMIC) ஜோ லோவின் வணிகப் பங்காளிகளில் ஒருவர் என்று நம்பப்படுவதாகவும் தி எட்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது.
1எம்டிபி ஊழலில், ஜோ லோவைத் தூண்டியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட யாக் யூ சீ என்ற சிங்கப்பூர் வங்கி அதிகாரி, இந்த விஷயத்தை சிஏடிக்கு வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குட் ஸ்டார் கட்டத்தில், 1எம்டிபி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட, 2011 மற்றும் 2013-க்கு இடையில், ஜோ லோ ADKMIC-ஐப் பயன்படுத்திக் கொண்டார்.
1எம்டிபி நிதி தொடர்பில், ஸெட்டியின் கணவர் மற்றும் இரண்டு மகன்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரத் தொடங்கின.
எழுந்த குற்றச்சாட்டுகளில், அயர்ன் ராப்சோடி பெற்ற நிதியின் ஒரு பகுதி, பின்னர் கட்டிங் எட்ஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Cutting Edge Industries Ltd) நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது, இது சிங்கப்பூர் யுபிஎஸ் வங்கியில் ஒரு கணக்கையும் கொண்டுள்ளது.
கட்டிங் எட்ஜ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தவ்ஃபிக் மற்றும் அவரது இரண்டு மகன்களான அப்துல் அஜீஸ் மற்றும் அலிஃப் அய்மான் ஆகியோர் 2009-ல் கையெழுத்திட்ட வாக்குமூலம் (எஸ்டி) உள்ளது.
எஸ்டி-யில், கட்டிங் எட்ஜ் இண்டஸ்ட்ரீஸிலிருந்து 1எம்டிபி-ஆல் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கணக்கிற்கு, நிதியை மாற்றுவதற்கான உத்தரவைப் பெற அவர்கள் சிஏடி சிங்கப்பூருக்கு அனுமதி வழங்கினர்.
1எம்டிபி அதன் முறைகேடான நிதியை மீட்டெடுக்க முயற்சித்தது.
முன்னதாக, ஸெட்டி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தவறான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டவை என்று விவரித்தார், மேலும் அவர்கள் 1எம்டிபி நிதியைப் பெறவில்லை என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்.டி.பி வழக்கு விசாரணையில், அவர் சாட்சியாக அழைக்கப்படலாம் என்பதால் ஸெட்டி மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.