மோகன் சான் தன்னுடைய கூற்றை மீட்டுக்கொள்ள வேண்டும்` – செமினி வட்டார இந்து சங்கம் அறைகூவல்

அண்மையக் காலமாக மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் மோகன் சான் வெளியிட்டு வரும் அறிக்கைகளில் சித்திரையேத் தமிழ்ப்புத்தாண்டு என்ற தவறான செய்தியை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என, செமினி வட்டார இந்து சங்க இளைஞர் பிரிவு தலைவர் சீரே சந்திரதேவன் @ நிலவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாளே என்றார் அவர்.

எந்த அடிப்படை உரிமையில் மலேசிய இந்து சங்கமும், இந்துமத அமைப்புகளும் தமிழர் தொடர்பான பற்றியங்களில் முடிவெடுக்கின்றனர் என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தான் உறுப்பினராக இருக்கும் இந்து மத சங்கம், இந்துமதச் செயல்பாடுகளில் முடிவெடுத்தால் அதில் எந்தக் கேள்வியும் தான் கேட்கப்போவதில்லை. ஆனால், தமிழினம் சார்ந்த முடிவுகளில் இந்துமத அமைப்பினர் தலையிட்டுத் தவறான செய்தியைத் தமிழ்மக்களிடம் பரப்புவதை ஏற்கமுடியாது என நிலவன் திட்டவட்டமாகக் கூறினார்.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், தமிழர்கள், குறிப்பாக இளையத் தமிழினத் தலைமுறையினர் இனத்திற்கும் மதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு அறிந்திருப்பதால், தமிழ்மொழி, தமிழினப் பற்றியங்களில் மூக்கை நுழைப்பதை உடனடியாக இந்துமத அமைப்பினர் கைவிட வேண்டும் எனவும் நிலவன் தெரிவித்தார்.

மோகன் சான் கடந்த 2018-ம் ஆண்டில், சித்திரையை (14 ஏப்பிரல்) இந்து புத்தாண்டு என அறிவித்து, அதற்குப் பொதுவிடுமுறை வேண்டுமென நாட்டின் பிரதமருக்குக் கோரிக்கை வழங்கினார். மேலும், கடந்த ஆண்டுகளில், சித்திரையை இந்து புத்தாண்டு எனக் கூறி, வாழ்த்துப் பதாகைகள் நாடெங்கும் பல இடங்களிலும் மின்னியல் ஊடகங்களிலும் மலேசிய இந்து சங்கம் வெளியிட்டுக் கொண்டாடினர். ஆனால், இந்த ஆண்டு சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என மோகன் சான் அறிவிப்பது இந்துக்களுக்கும் அவர் நேர்மையானவரல்லர் என்பதையே உணர்த்துகின்றது என நிலவன் தெளிவுபடுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டு 15.1.2020-ல், பி.பி.சி தமிழ் (BBC tamil) ஊடகத்தில் பொங்கல் இந்து மத பண்டிகை அல்ல, அது தமிழர் பண்டிகை என்று அறிக்கை விடுத்துவிட்டு, இந்த ஆண்டு பொங்கல் இந்துமதப் பண்டிகை என்று அறிவிப்பதை எவ்வாறு எற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பினார்.

“இந்துக் குழந்தைகளுக்குப் பொங்கல் ஒரு பண்பாட்டுப் பண்டிகை, அதில் சமயச் சார்பு இல்லை என்று சொல்லிக்கொடுத்து, அவர்களின் எண்ணங்களில் தவறானக் கருத்தைத் திணிப்பது தவறு என்று கூறும் மோகன் சான், கடந்த ஆண்டு இந்து குழந்தைகளைத் தன் அறிவிப்பால் கெடுத்தது எதற்காக? கடந்த ஆண்டு சௌமாரத்தில் சூரிய பகவானை முதன்மைக் கடவுளாக அவர் ஏற்கவில்லையா?” என நிலவன் மேலும் வினவினார்.

உடலும் உயிரும் போலதான் தமிழும் சமயமும் என்று வெறும் அறிக்கையில் மட்டும் இருக்கக் கூடாது. அது செயலில் இருக்கவேண்டும்; பயன்பாட்டில் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இறைப்பாடல்கள் தமிழில்தான் உள்ளதென்றால், ஏன் தமிழ் வழிபாட்டு மொழியாகக் கோவில் கருவறைக்குள் செல்லவில்லை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. தமிழ்நாட்டுக் கோவில்களில் குடமுழுக்கு வழிபாடுகள் தமிழில் செய்யலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பையும் மலேசிய இந்து சங்கம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.

“ஒரே இனத்தார் ஒரே மதமாக இருப்பதில்லை, ஒரே மதத்தார் ஒரே இனமாக இருப்பதில்லை. இருப்பினும், ஓர் இனத்திற்கும் மதத்திற்கும் பாலமாக மாறாமல் இருப்பது அவ்வினத்தின் பண்பாட்டு விழுமியங்களே.

“தமிழருக்கு அந்தப் பண்பாட்டைச் சார்ந்ததுதான் தைப்பொங்கல். அதனை இறை நம்பிக்கையாளரும் நம்பிக்கை அற்றாரும் பொது நிலையில் கொண்டாட இயலும். தமிழ்ச்சமயங்களில் உள்ளவர்களும், சமயங்கடந்தவர்களும் அல்லது இந்து, மூசுலிம், கிறித்துவம் போன்ற மற்ற மதங்களைத் தழுவியவரும் மதக் கொள்கைகளுக்கு அப்பால் தமிழினம் எனும் முறையில் பொங்கலைக் கொண்டாட முடியும்.

“எனவே, தமிழரின் பொங்கல் திருநாளை இந்துமத சாயம் பூசுவதை மோகன் சான் நிறுத்திக்கொண்டு தன் கூற்றை மீட்டுக்கொள்ள வேண்டும்,” என நிலவன் அந்த அறிக்கையில் வலியுறுத்தினார்.

தமிழ் முன்னோர்கள் தை மாதத்தையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர். அதற்குப் பல இலக்கியச் சான்றுகளையும் வாழ்வியல் சான்றுகளையும் வானியல் சான்றுகளையும் கல்வெட்டுச் சான்றுகளையும் வழங்கி தமிழ்ப் பேரறிஞர்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

“சித்திரைப் புத்தாண்டு இடைக்காலத்தில் தமிழரிடத்தில் திணிக்கப்பட்ட வரலாற்றுப் பிழை என்பதையும் சான்றுகளுடன் நிறுவிவிட்டனர். சித்திரை தமிழ்ப்புத்தாண்டு எனத் தமிழ் இலக்கியங்களில் எங்குமே குறிப்பிடப்படவில்லை என்பதையும் தமிழருக்கான திருவள்ளுவர் தொடராண்டு பயன்பாட்டில் உள்ளது என்பதனையும் மோகன் சான் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்,” என நிலவன் தெரிவித்துள்ளார்.

எல்லா இனத்தினருக்கும் எல்லா மதத்தினருக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. எவருடைய கொள்கைகளிலும் யாரும் விருப்பம் போல் தலையிடுவது பெருந்தவறு. தமிழர்கள் ஓர் இனத்தினர். அவர்கள் பல்வேறு சமயங்களிலும் சமயங்கங்கடந்த நிலைகளிலும் இருக்கின்றார்கள். அவ்வாறுதான் தமிழர்கள் தழுவிக்கொண்டு ஒரு மதம் இந்து மதம். அவ்வளவுதான். அவர்களுக்கென தனி தமிழ்ச்சமயங்கள் உள்ளன என்பதைத் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள முயல வேண்டும். மலேசியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி ஆரிய சனாதனதர்ம பூசல்களின்றி இயங்கும் தமிழ்ச்சமயமான சிவனிய மடங்கல், கழகங்கள் போன்றவை, தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதை ஏற்றும் அறிவித்தும் கொண்டாடியும் வருவதை இந்துமதத் தலைவர் மோகன் சான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என நிலவன் விளக்கமளித்துள்ளார்.

ஆகவே, இந்து சங்கத் தேசியத் தலைவர் தன்னுடைய பொங்கல் இந்துமதப் பண்டிக்கை என்றக் கூற்றையும் சித்திரையேத் தமிழ்ப்புத்தாண்டு என்ற கூற்றையும் விரைவில் மீட்டுக் கொள்ளும்படி செமினி வட்டார இந்து சங்க இளைஞர் பிரிவு தலைவர் நிலவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒருகால், மோகன் சான்  தன்னுடையக் கூற்றை மீட்டுக் கொள்ளவில்லை என்றால், தான் உடனடியாக வட்டாரப் பேரவை இளைஞர் பிரிவு பொறுப்பிலிருந்து பதவி விலக அதிரடி முடிவெடுத்துள்ளதாகவும் மலேசியாகினிக்கு அனுப்பிய ஓர் அறிக்கையில் நிலவன் கூறியுள்ளார்.