கோவிட் -19 சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், மார்ச் 14-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்ற சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) எடுத்த முடிவு, கல்வி அமைச்சின் முடிவிற்கு விழுந்த `பலத்த அடி’ என்று முன்னாள் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“இந்த முடிவு கல்வி அமைச்சுக்கு விழுந்த ஓர் அடி. அடிப்படையில், <em>நான் உங்களுடன் உடன்படவில்லை</em>
என சரவாக் மாநில அரசு கூறியுள்ளது,” என்று தியோ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சரவாக் சுகாதாரத் துறை மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜேபிபிஎன் தெரிவித்துள்ளது.
பாலர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள், மார்ச் 1 முதல் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சு முன்பு முடிவு செய்திருந்தது.
ஆண்டு 1 மற்றும் 2 மாணவர்கள் மார்ச் 1-ம் தேதி பள்ளிக்குத் திரும்புவதாகவும், ஆண்டு 3 முதல் 6 மாணவர்கள் மார்ச் 8-ம் தேதி பள்ளிக்குத் திரும்புவதாகவும் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் அறிவித்தார்.
“எனவே, தீபகற்பம் மற்றும் சபாவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குக் கல்வியமைச்சு விளக்கமளிக்க வேண்டும்.
“சரவாக் சிவப்பு மண்டலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பாதுகாப்பானது அல்ல என்று அவர்கள் நினைத்தால், மலேசியாவின் பிற மாநிலங்களில் எங்களுக்கு எப்படி பாதுகாப்பாக இருக்கும்?” என்று தியோ கேள்வி எழுப்பினார்.
சரவாக்கில், கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டதல்ல என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 27 அன்று, சரவாக் நகரில் மொத்தம் 255 பாதிப்புகள், ஜொகூரில் 314 பாதிப்புகள், சிலாங்கூரில் 862, பேராக்கில் 305 மற்றும் கோலாலம்பூரில் 117 எனப் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
“நேற்றைய நிலவரப்படி, சரவாகில் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 2,397, ஜொகூரில் 2,734, சிலாங்கூரில் 3,002, பேராக்கில் 3,626 மற்றும் கோலாலம்பூரில் 2,911.
“சரவாக் தற்போது நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) கீழ் உள்ளது, ஆனால் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது.
“சிலாங்கூர், ஜொகூர் மற்றும் சில மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருப்பதற்கான அறிகுறிகள் இவை அல்லவா?
“எனவே, சரவாக் சிவப்பு மண்டலத்தில் உள்ள பள்ளிகள் மார்ச் 14 வரை மூடப்படும் என்று தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் காரணிகள் யாவை? மற்ற மாநிலங்களின் சிவப்பு மண்டலங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான காரணிகள் என்ன?
“பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது உண்மையில் பாதுகாப்பானது என்ற அறிவியல் மற்றும் தர்க்கரீதியான முடிவுகளை அடைய, என்ன அளவீட்டு குறிகாட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன?” எனக் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சின் அந்த முடிவு, தொழில் ரீதியாக, துல்லியமான சான்றுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் எடுக்கப்பட்டது என்பதைக் கல்வியமைச்சு மலேசியர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.